அரசியல் கட்சிகள், வேட்பாளர்களுக்குப் பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக தேர்தல் அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதனடிப்படையில், வருமான வரித்துறை மற்றும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், வேட்பாளர்களின் உறவினர் வீடுகள், அவர்களுக்கு நெருங்கியவர்களைக் கண்காணித்து வருகின்றனர். கடந்த வாரம், முசிறி தொகுதி அதிமுக வேட்பாளர் செல்வராஜுக்கு நெருக்கமானவர்களின் காரில் கொண்டு செல்லப்பட்ட ஒரு கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
காரில் சென்ற 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் திருச்சி மாவட்டம், மணப்பாறை தொகுதி வலசுப்பட்டியில் உள்ள மணப்பாறை தொகுதி எம்எல்ஏ சந்திரசேகரனிடம் JCP ஆப்ரேட்டராக வேலை பார்க்கும் அழகர்சாமி என்பவரது வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை செய்தனர். அதிகாரிகள் சோதனையில், ஒரு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அடுத்தடுத்து அதிமுகவின் உறவினர்கள் மற்றும் நெருங்கியவர்கள் வீட்டில் இருந்து பணம், பரிசுப் பொருட்கள் பிடிபடுவதால், தேர்தல் அதிகாரிகளும் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.