முரண், மோதல் என அதிமுகவில் ஒற்றைத் தலைமை தொடர்பான விவாதங்கள் கிளம்பி, கடைசியில் சலசலப்புடன் கடந்த 23 ஆம் தேதி வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபமான ஸ்ரீ வாரு திருமண மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு நடந்து முடிந்தது. இந்த பொதுக்குழுக் கூட்டத்திற்கு முன்பே பொதுக்குழுக் கூட்டத்தை நடத்தக்கூடாது, அப்படி நடத்தினால் ஒப்புதல் கொடுக்கப்பட்ட 23 தீர்மானங்களை மட்டுமே நிறைவேற்ற வேண்டும். அதனைத் தவிர்ந்து வேறெந்த தீர்மானமும் நிறைவேற்றப்படக் கூடாது எனச் சென்னை உயர்நீதி நீதிமன்றத்தில் சண்முகம் என்ற பொதுக்குழு உறுப்பினர் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் 23 தீர்மானங்களைத் தவிர வேறெந்த தீர்மானமும் நிறைவேற்றப்படக் கூடாது என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தது.
இதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் யாராவது மேல்முறையீடு செய்தால் தங்கள் தரப்பு வாதத்தைக் கேட்காமல் விசாரிக்கக் கூடாது என ஓபிஎஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் இபிஎஸ் சார்பில் இந்த வழக்கின் தீர்ப்பு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தற்பொழுது மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. அதில், ”பொதுக்குழு,செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் கட்சி நிர்வாகிகள் தொடர்புடையது. இதில் நீதிமன்றம் தலையிட எதுவும் இல்லை. பொதுக்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை நீதிமன்றம் கட்டுப்படுத்த முடியாது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.