டெல்லி சென்றவர்கள் மருத்துவ பரிசோதனைகளை செய்து கொள்வது அவசியம் என்றும் எல்லோரும் இணைந்து நிற்க வேண்டிய தருணத்தில் பிரிவினையை தூண்ட வேண்டாம், இத்தருணத்தில் வெறுப்பு அரசியலை தூண்டுவது கண்டிக்கத்தக்கது என மஜக பொதுச் செயலாளரும், நாகை எம்எல்ஏவுமான மு.தமிமுன் அன்சாரி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆன்மிக பணிக்காக டெல்லிக்கு சென்ற தப்லீக் ஜமாத்தினர் வெளிநாட்டவர்களால் கொரோனா தொற்றுக்கு ஆளாகியிருக்கலாம் என அஞ்சப்படுவதால், அவர்களில் தமிழகம் திரும்பியவர்கள் தாமாக முன் வந்து மருத்துவ பரிசோதனைகளுக்கு ஆட்பட்டு இருக்கிறார்கள்.
பலர் அந்தந்த ஊர் ஜமாத்தினர், குடும்பத்தினரின் ஆலோசனையின் படி, அதிகாரிகளின் வழிகாட்டலை ஏற்று மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்பட்டு இருக்கிறார்கள். இதையும் கடந்து யாரேனும் கவனக்குறைவாக இருந்தால், அவர்கள் தாமாக முன் வந்து மருத்துவ பரிசோதனைகளுக்கு தங்களை ஆட்படுத்திக் கொள்ளும்படி வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.
நாட்டின் சூழல், பொது மக்களின் உயிர் பாதுகாப்பு, தங்கள் குடும்பத்தினர் நலம் ஆகியவை இதில் அடங்கியிருக்கிறது என்பதை இந்நேரத்தில் சுட்டிக் காட்டுகிறோம். தே சமயம், பொது சமூகத்திற்கு சில விசயங்களை விளக்க கடமைப்பட்டுள்ளோம்.
அதில் முதலாவது இவ்விசயத்தில் வரம்பு மீறிய விமர்சனங்களை சிலர் பரப்புவது நியாமற்றது என்பதாகும். தப்லீக் ஜமாத் என்பது அரசியல், சமுதாய சேவை ஆகியவற்றில் ஆர்வம் காட்டாத ஒரு ஆன்மீக அமைப்பாகும். அவர்கள் "ஐந்து வேளை இறைவனை தொழ வேண்டும்" என்ற ஒற்றை கொள்கையை முஸ்லிம்களிடம் மட்டும் பரப்புரை செய்பவர்கள். வேறு எதையும் இவர்கள் செய்வதில்லை என்பதும், சொந்த பணத்தில் இவர்கள் பயணம் மேற்கொள்பவர்கள் என்பதும், மிகவும் சாதுவானவர்கள் என்பதும் மத்திய - மாநில அரசுகளும், உளவு அமைப்புகளும் அறிந்த உண்மைகளாகும்.
தங்களது தப்லீக் பணிகள் மற்றும் சுற்றுபயணங்கள் குறித்து ஓராண்டுக்கு முன்பாகவே, இவர்கள் திட்டமிடுபவர்கள். அவ்வாறு திட்டமிட்டு, உள் அரங்கத்தில் கூடிடும் பிரதிநிதிகள் மாநாட்டில் பங்கேற்க மார்ச் 21 அன்று டெல்லியில் கூடியிருக்கின்றார்கள். இவர்கள் தங்களது சொந்த ஊர்களிலிருந்து மார்ச் 18 மற்றும் 19 தேதிகளில் புறப்பட்டுவிட்டார்கள்.
பிரதமர் அவர்கள் மார்ச் 22 அன்று தான் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார். அதன் பிறகே நிலைமைகளை உணர்ந்து தப்லீக் ஜமாத்தினரும் தங்கள் ஊர்களுக்கு திரும்ப தொடங்கி உள்ளார்கள். பலர் திரும்ப முடியாமல் அங்கேயே சிக்கிக் கொண்டுள்ளனர். அங்கு ஊர் திரும்ப முடியாமல் தங்கியிருந்தவர்கள் குறித்த விபரமும் டெல்லி காவல்துறைக்கு தெரியப்படுத்தப்பட்டிருக்கிறது. அவர்கள் திட்டமிட்டு எந்த விதிமீறல்களிலும் ஈடுபடவில்லை.
அதே மார்ச் 22 அன்று ஏற்கனவே திட்டமிட்டப்படி நாடு முழுவதிலிமிருந்து அயோத்தியில், உ.பி முதல்வர் ஆதித்யா யோகி தலைமையில் பல்லாயிரக்கணக்கானோர் ஒன்று கூடியுள்ளனர் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். மிக முக்கியமாக இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் மார்ச் 23 வரை நடைப்பெற்றது. தமிழக சட்டமன்றம் மார்ச் 24 வரை நடைப்பெற்றது. நாடாளுமன்றமும், சட்டமன்றமும் ஊரடங்கு உத்தரவை மீறி நடந்துள்ளது கவனிக்கத்தக்கது.
மேலும் பிரதமர் அறிவிப்பு செய்யும் வரை உள்நாடு, வெளிநாட்டு விமானப் போக்குவரத்துகள் நடந்துள்ளன. இத்தகைய நெருக்கடியான நிலையில் தப்லீக் மாநாட்டில் பங்கேற்க வெளிநாட்டில் இருந்து வந்தவர்களை டெல்லி விமான நிலையத்தில் உரிய மருத்துவ பரிசோதனைகளை நடத்தாமல் கவனக்குறைவாடு இருந்தது யார் தவறு?
அவர்கள் வழக்கம் போல் இதற்குதான் வருகிறார்கள் என்பது RAW மற்றும் IB போன்ற உளவு அமைப்புகளுக்கு தெரியாதா? இந்த நேரத்தில் அவர்களது வருகையை ஆய்வு செய்வது அவர்களது பணி தானே. இவை பற்றி எல்லாம் சிலர் சிந்திக்காமல், பதட்டமான சூழலை உருவாக்க நினைப்பது நியாயம் தானா?
இதுபோன்ற நெருக்கடியான தருணங்களில் எவ்வாறு பொதுமக்கள் நடந்துக் கொள்ள வேண்டும் என இஸ்லாமிய மார்க்கம் வழிகாட்டியுள்ளது. நபிகள் நாயகம் அவர்கள் கீழ்கண்டவாறு அறிவுறுத்தியுள்ளார்கள். "ஒரு ஊரில் தொற்று நோய் பரவினால் அவ்வூரை விட்டு யாரும் வெளியேற வேண்டாம். அந்த ஊருக்கு யாரும் போகவும் வேண்டாம்" எனவும் போதித்துள்ளதை நினைவூட்டுகிறோம். இதன் அடிப்படையிலும், அரசின் அறிவிப்பை ஏற்றும் தமிழகம் உட்பட நாடு முழுக்க ஐந்து வேளை தொழுகை நடக்கும் பள்ளிவாசல்கள் பூட்டப்பட்டுள்ளன. மதரஸா போன்ற பாட சாலைகளும், தர்ஹாக்களும் மூடப்பட்டுள்ளன. அனைத்து மதத்தினரும் பயன்படுத்தும் நாகூர் தர்ஹா 463 ஆண்டுகளில் முதன் முறையாக பூட்டப்பட்டுள்ளது.
மனிதநேய ஜனநாயக கட்சி போன்ற கட்சிகளும், சிறுபான்மை மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இயக்கங்களும் அதிகாரிகளுடன் இணைந்து சுகாதாரப்பணிகளிலும், இலவச உணவு வினியோகப் பணிகளிலும் தன்னார்வத்துடன் ஈடுபட்டு வருகிறார்கள். இதையெல்லாம் புறக்கணித்து விட்டு, டெல்லி நிகழ்வை மட்டுமே மையப்படுத்தி பிரிவினையை வளர்ப்பது நல்ல பண்பல்ல.
பிரதமரின் ஊரடங்கு உத்தரவுக்கு முன்பாக டெல்லிக்கு சென்ற தப்லீக் ஜமாத்தினரின் கவனக் குறைவை சுட்டிக்காட்டுவது தவறல்ல! ஆனால் இதை முன்னிறுத்தி ஒரு சமூகத்தையே குறிவைத்து நடக்கும் பரப்புரைகளை அனைவரும் கண்டிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
இவ்விசயத்தில் மத்திய - மாநில அரசுகளுடன் இணைந்து நின்று கரோனா நோயை ஒழிக்க உறுதியுடன் அனைவரும் இணைந்து நிற்போம் என்று சகல தரப்புக்கும் வேண்டுகோள் வைக்கிறோம். எல்லோரும் இணைந்து நிற்க வேண்டிய தருணத்தில் பிரிவினையை தூண்ட வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு கூறியுள்ளார்.