முன்னாள் அமைச்சர் வேலுமணியின் வீடு மற்றும் அவர் சார்ந்த நிறுவனங்களில், இரண்டாவது நாளாக ரெய்டு நடந்து கொண்டிருந்த போது, ஆக. 11 அன்று காலை 7 மணியளவில் தூத்துக்குடி ஏர்போர்ட்டில் வந்து இறங்கினார் வேலுமணி. அவர் தூத்துக்குடி வருவது சஸ்பென்சாகவே இருந்திருக்கிறது. விமான நிலையத்தைவிட்டு வெளியே வந்த வேலுமணியின் காரை நிறுத்திய போலீசார், அவரிடம் விசாரித்தபோது, திருச்செந்தூர் ஆலய தரிசனம் மற்றும் பூஜைக்கு செல்வதாகச் சொல்லிவிட்டு வேகமாகக் கிளம்பியிருக்கிறார்.
அதையடுத்த சில மணி நேரங்களில் மேலேயிருந்து வந்த தகவலையடுத்து, போலீசார் வேலுமணியைத் தீவிரமாகத் தேடியிருக்கிறார்கள். திருச்செந்தூரைச் சலித்ததில் அவர் அங்கு தென்படவில்லையாம். அதே சமயம் குற்றாலம், ஐந்தருவி பகுதிகளில் உள்ள ரிசார்ட்டுகள் மற்றும் செங்கோட்டை மேக்கரை, தெற்குமேடு, அடவிநயினார் அணை உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலுள்ள அத்தனை ரிசார்ட்டுகளையும் போலீசார் சலித்தபோது வேலுமணி கிடைக்கவில்லையாம். அதே நேரத்தில் மணிமுத்தாறு மலைப்பகுதியில் கையில் வேல் வைத்திருக்கும் கடவுள் பெயரைக் கொண்ட, அ.தி.மு.க. தி.மு.க.விற்கு வேண்டப்பட்ட அந்தக் காண்ட்ராக்டரின் பங்களாவில் தங்கியிருப்பதாகவும் தகவல்கள் ஓடின. இந்நிலையில் மதியம் 3.30 மணி ப்ளைட்டைப் பிடிப்பதற்காக வேலுமணி தூத்துக்குடி ஏர்ப்போர்ட்டிற்கு வந்த பிறகு தான் அந்த சஸ்பென்ஸ் முடிவுக்கு வந்திருக்கிறது.
வேலுமணி வந்தது குறித்து கட்சியின் முக்கியமான புள்ளிகள் மட்டத்தில் விசாரித்தபோது அன்றைய தினம் காலையில் தூத்துக்குடி ஏர்போர்ட்டிற்கு வந்திறங்கிய வேலுமணியை திருச்செந்தூரில் பெண் பெயரில் பிரபல ஹோட்டல் வைத்திருக்கும் அந்தப் புள்ளி தனது சொகுசு காரில் வேலுமணியை அழைத்துக் கொண்டு, தனது ஹோட்டலுக்குச் சென்றிருக்கிறாராம்.
தரிசனம், பூஜை என்று போலீசாரைத் திசை திருப்பிய வேலுமணி, அன்றைய தினம் அந்த ஹோட்டலிலேயே தங்கியிருந்திருக்கிறாராம். வெளியே தலைகாட்டவில்லையாம். அவர் அந்த ஹோட்டலுக்கு வந்தது கூட மிகவும் ரகசியமாகவே வைக்கப்பட்டிருக்கிறது. முக்கியமான டீலிங் விசயமாக அங்கு வந்த வேலுமணி அங்கிருந்தபடியே தனது டீலிங்களை முடித்துக் கொண்டு மதியம் ப்ளைட்டைப் பிடிப்பதற்காக தூத்துக்குடி ஏர்ப்போர்ட் வந்த பிறகு தான் பரபரப்பு அடங்கியிருக்கிறது.