கள்ளக்குறிச்சியில் தமிழக பாஜக மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று கள்ளக்குறிச்சி வந்திருந்தார். கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நிறைவடைந்த பிறகு செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது, ''தமிழகத்தில் 2021ஆம் ஆண்டுக்கான பேரிடர் நிதியாக மாநில அரசு தனது பங்கை கொடுப்பதற்கு முன்னரே மத்திய அரசு தனது பங்கை மாநில அரசுக்கு தந்துள்ளது. அதை மாநில அரசு செலவும் செய்துள்ளது. தமிழக அரசு கேட்பதற்கு முன்பே அதிகமான நிதியை மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்கிக் கொண்டுதான் உள்ளது. திமுகவைச் சேர்ந்த எம்.பிக்கள், அமைச்சர்கள் மத்திய அரசு தமிழக அரசை நன்றாக பார்த்துக் கொள்கிறது எந்த பாரபட்சமும் இல்லாமல் நடத்துவதாகக் கூறி உள்ளனர். அதேபோன்று பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டுவர வேண்டுமென திமுகவைச் சேர்ந்த எம்.பி, டி.ஆர்.பாலு அவ்வப்போது கூறி வருகிறார்.
இதே கருத்தைத்தான் நாங்களும் கூறி வருகிறோம். ஆனால் மாநில நிதித்துறை அமைச்சராக உள்ள தியாகராஜன் ஜிஎஸ்டி வரம்பிற்குள் பெட்ரோல், டீசல் விலையைக் கொண்டு வரமாட்டோம் என்று கூறுகிறார். பெட்ரோல், டீசல் விலை குறித்து மக்களை திமுக தரப்பினர் இரண்டு விதமான கருத்துக்களைக் கூறி குழப்பம் அடையச் செய்து வருகின்றனர். மேலும் அனைத்து மத்திய அரசின் பட்ஜெட்டிலும் தமிழகத்திற்கு வலுசேர்க்கும் விதமாகச் செயல்பட்டு வருகிறது. மத்திய அரசு கடந்த 7 ஆண்டுகளில் மட்டும் ஏழரை லட்சம் கோடிக்கு மேல் தமிழக அரசுக்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. மத்திய அரசு இதன் மூலம் ஸ்மார்ட் சிட்டி, மருத்துவக் கல்லூரி உட்பட பல்வேறு திட்டங்களைத் தமிழக அரசு நிறைவேற்றி மற்ற மாநிலங்களை விட தமிழகம் முதலிடத்தில் உள்ளது. இதற்கு முழு காரணம் மத்திய அரசு என்பதை மறந்துவிடக் கூடாது. அதேபோன்று பாஜக-அதிமுக கூட்டணி நன்றாகவே உள்ளது. தமிழகத்தைப் பொருத்தவரை காங்கிரஸ் கட்சி என்பது ஒரு பல்லில்லாத பாம்பு. அவர்களுக்குள் உள்ள உட்கட்சி பிரச்சினையைப் பற்றி ஆராய்ந்து பார்க்காமல், கண்ணாடி கூண்டுக்குள் உட்கார்ந்து கொண்டு கல் எறிந்து வருகிறார்கள்'' என்றார்.