டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி இன்று சந்தித்தார். அப்போது தமிழக அரசியல் சூழல், தமிழ்நாட்டின் காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை தேர்ந்தெடுப்பது மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து கலந்தாலோசித்தாகச் சொல்லப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த கே.எஸ்.அழகிரி, “கடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் போட்டியிட்ட தொகுதிகளில் 72 சதவிகித வாக்குகளை பெற்று வெற்றி பெற்றது. வெற்றி சதவிகிதம் 72 ஆகும். தமிழகத்தில் போட்டியிட்ட இடங்களில் அதிகமான எண்ணிக்கையில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. காங்கிரஸ் உடன் பாஜக போட்டி என்று சொல்லுகிறார்கள். கடந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜகவினர் அதிமுக கூட்டணியில் 23 இடங்களைப் பெற்றார்கள். ஆனால் 4 இடங்களில் தான் வெற்றி பெற்றார்கள். அன்றைய தலைவரும் இன்றைய தலைவரும் வெற்றி பெறவில்லை.
கூட்டணியில் எவ்வளவு தொகுதி பெறுகிறோம் என்பது முக்கியமில்லை. எவ்வளவு வெற்றி பெறுகிறோம் என்பது தான் முக்கியம். முன்பைவிட அதிக தொகுதிகளை நாங்கள் கேட்டுப் பெறுவோம். அதிக வெற்றியை நாங்கள் அடைவோம். இந்த வெற்றிக்கு காரணம் ராகுல் காந்தியும் முதல்வர் மு.க.ஸ்டாலினும் தான். இவர்களின் பரப்புரை, சுற்றுப்பயணம் தான் வெற்றிக்கு காரணம். இது தனிமனித வெற்றி அல்ல.
நான் காங்கிரஸ் தலைவராக இருந்தாலும் இல்லையென்றாலும் காங்கிரஸ் கட்சி வளர்ச்சிக்காக பாடுபடுவேன். காங்கிரஸ் என்னை மதித்திருக்கிறது. பெருமைகளையும் சிறப்புகளையும் தந்திருக்கிறது. கடந்த 25 ஆண்டுகளில் மற்ற தலைவர்களை விட அதிகமான காலம் தமிழக காங்கிரஸ் தலைவராக செயல்பட்டு இருக்கிறேன். மீண்டும் காங்கிரஸ் தலைவர் ஆக வேண்டும் என்ற நோக்கத்தில் வரவில்லை. எந்த பணி கொடுத்தாலும் செய்வேன்” எனத் தெரிவித்தார்.