Skip to main content

''ஜெயலலிதாவா இருந்தா என்ன தூக்கிலா போட்டிருப்பாங்க..''- திருநாவுக்கரசு பேட்டி 

Published on 12/10/2022 | Edited on 12/10/2022

 

Thirunavukarasu interview

 

சென்னை, அமைந்தகரையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளி வளாகத்தில் தி.மு.க.வின் 15வது பொதுக்குழு கூட்டம் கடந்த 09/10/2022 ஆம் தேதி காலை 10.00 மணிக்கு நடைபெற்றது. அதில், தி.மு.க.வின் தலைவராக இரண்டாவது முறையாகப் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இந்த கூட்டத்தில் பேசிய முதல்வர், ''காலையில் எழுந்திருக்கும் பொழுதே நம்மை சேர்ந்தவர்கள் எதாவது யாராவது பிரச்சனையை கிளப்பிருப்பாங்களா? அப்படினு பயந்துகொண்டே எழுந்திருக்க வேண்டி இருக்கிறது. இதனால் சரியாக தூக்கமும் வருவதில்லை. என் உடலை பார்த்தாலே உங்களுக்கு தெரியும்'' என பேசியிருந்தார்.

 

இந்த பேச்சு பல்வேறு விவாதங்களுக்கு வித்திட்டது. இந்நிலையில் செய்தியாளர் சந்திப்பில் முதல்வரின் பேச்சு குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசு, ''சர்வாதிகாரிகளுக்கும் இந்தகாலத்தில் பிரச்சனை இருக்கத்தான் செய்யும். சர்வாதிகாரிகள் மட்டும் நிம்மதியாகவா இருந்தார்கள். சர்வாதிகாரியாக இருந்து செயல்படுவேன், நடவடிக்கை எடுப்பேன் என்று சொன்னால் பிரச்சனையே இல்லை என்று அர்த்தம் கிடையாது அல்லவா. அது அவர்களுடைய கட்சி கூட்டம். அந்தக் கூட்டத்தில் அவர் அந்த கட்சியின் தலைவர் என்கின்ற முறையில் அவருடைய கட்சிக்காரர்களுக்கு சில ஆலோசனைகளை, அறிவுரைகளை சொல்லியிருக்கிறார். இதுபோன்று வெளியில் பேசும் பொழுது, தனிப்பட்ட முறையில் பேசும் பொழுது கவனம் செலுத்துங்கள். உங்களை கேமராவில் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். கழிவறை, படுக்கையறையை தவிர மற்ற எல்லா இடங்களும் பொது இடமாகிவிட்டது. எனவே கவனமாக இருக்க வேண்டும். ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். வார்த்தைகளைப் பார்த்து பேச வேண்டும் என்று கட்சிக்காரர்களுக்கு ஆலோசனை சொல்லி இருக்கிறார். அதில் ஒன்றும் தவறு கிடையாது.

 

NN

 

அப்படி இல்லாமல் யாராவது ஒருவர் இரண்டு பேர் மாற்றி பேசினீர்கள் என்றால் எனக்குத்தான் டென்ஷன் ஆகிறது. கட்சித் தலைவர் என்கின்ற முறையில், முதல்வர் என்ற முறையில் உரலுக்கு ஒரு பக்கம் இடி மத்தளத்திற்கு இரண்டு பக்கம் இடி என்று சொல்லி இருக்கிறார். இப்படி பல தாக்குதல்களில் நான் இருக்கிறேன் எனவே கட்சிக்காரர்கள் எனக்கு ஒத்துழைக்க வேண்டும். உங்களாலும் எனக்கு பிரச்சனை வரக்கூடாது என்று முதலமைச்சர் சொல்வது எந்த தவறும் கிடையாது. அது அவர் கட்சிக்காரர்களுக்கு கொடுத்த ஆலோசனை'' என்றார்.

 

அப்பொழுது செய்தியாளர் ஒருவர் 'ஜெயலலிதா இருந்தால் இப்படி விடுவாரா..?'' என கேள்வி எழுப்ப, அதற்கு பதிலளித்த திருநாவுக்கரசு, ''அம்மாவா இருந்தால் என்ன தூக்குலையா போட்டிருப்பாங்க. கட்சிக்காரர்களை என்னப்பா பண்ண முடியும். கட்சிக்காரர்களுக்கு ஆலோசனை சொல்கிறார். தப்பு செய்தால் நடவடிக்கை எடுப்பேன் என்று சொல்கிறார். அதற்காக எல்லாரையும் துப்பாக்கி எடுத்து சுட முடியுமா அல்லது தூக்கில் போட முடியுமா? நடவடிக்கை எடுப்பேன் என்று சொல்லும் உரிமை தலைவருக்கு இல்லையா?'' என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்