கர்நாடக மாநில சட்டப் பேரவைத் தேர்தல் வரும் மே மாதம் 10 ஆம் தேதி நடைபெறுகிறது. கர்நாடகாவில் மொத்தம் 224 சட்டமன்றத் தொகுதிகள் உள்ள நிலையில், இழந்த ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸும், இருக்கும் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ளும் முனைப்பில் பாஜகவும் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. பாஜக சார்பில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஜே.பி.நட்டா உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதேபோன்று காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட தலைவர்களும் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கும் சூழலில் வேட்பாளர் தேர்வு, பிரச்சாரம் உள்ளிட்ட பல்வேறு வியூகங்களை வகுத்து கர்நாடகா மாநில பாஜக, காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய அம்மாநிலத்தின் பிரதான கட்சிகள் மும்முரமாக இயங்கி வருகின்றன. கர்நாடக பாஜகவின் முக்கியத் தலைவராக இருந்த ஜெகதீஸ் ஷெட்டர் சமீபத்தில் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்திருந்தார். மேலும் பாஜகவில் இருந்தும் ராஜினாமா செய்து இருந்தார். ஆறு முறை எம்.எல்.ஏவாக இருந்துள்ள ஷெட்டர் தனது ராஜினாமா கடிதத்தை சட்டசபை சபாநாயகர் விஸ்வேஷ்வர் ஹெக்டே காகேரியிடம் கொடுத்திருந்தார்.
இதற்கு முன்னதாக கடந்த சனிக்கிழமை இரவு கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, மத்திய அமைச்சர்களான பிரகலாத் ஜோஷி, தர்மேந்திர பிரதான் ஆகியோர் ஜெகதீஷ் ஷெட்டரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து பெங்களூருவில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.
இந்நிலையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்து ஜெகதீஷ் ஷெட்டர் பேசுகையில், "நான் கடந்த 40 ஆண்டுகளாக பாஜகவில் இருந்தேன். கட்சி தலைமை எனக்கு கொடுத்த அனைத்து பொறுப்புகளையும் கடமையுணர்வுடன் செய்து வந்தேன். மேலும் கட்சியின் செயல் திட்டங்களை எந்த குறையும் இன்றி செய்து வந்த எனக்கு பாஜக தலைமை கொடுத்த பரிசு தான் இந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்காதது. அதுமட்டுமல்லாமல் சந்தர்ப்பவாதி என்ற பட்டமும் கொடுத்துள்ளனர். எனக்கு பாஜக தலைமை அநியாயம் செய்துவிட்டது. தேர்தலில் போட்டியிட எனக்கு வாய்ப்பு வழங்காமல் தவிர்க்க பலர் முயற்சி மேற்கொண்டனர். அதில் முக்கிய நபராக விளங்கியவர் கட்சியின் தேசிய அமைப்பு செயலாளர் பி.எல்.சந்தோஷ் இருந்தார். அவரால் தான் கர்நாடக மாநில பாஜக அழிவின் பாதைக்கு சென்று கொண்டிருக்கிறது. இதனை புரிந்து கொள்ளாமல் சிலர் அவரிடம் நட்பு பாராட்டி வருகின்றனர்.
எனக்கு ஏற்பட்ட நிலை, வேறு சிலருக்கும் வரும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. என்னைப் போல் பலரும் பாஜக தலைமையால் வஞ்சிக்கப்பட்டு உள்ளனர். கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக தேர்தல் பொறுப்பாளராக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நியமனம் செய்யப்பட்டுள்ளார். மாநிலத்தில் நான் மட்டுமல்ல எடியூரப்பாவும் முதல்வராக இருந்தபோது ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றி, எங்கள் முன் கைக்கட்டி வேலை செய்தவர் தற்போது தேர்தல் பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளதால் அவர் முன் நாங்கள் கைக்கட்டி நிற்க வேண்டுமா. அவர் இதுவரை எத்தனை தேர்தல்களில் போட்டியிட்டுள்ளார். எத்தனை முறை வெற்றி பெற்றுள்ளார். கடந்த 2021 இல் நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் அவர் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அதிமுகவுடன் கூட்டணி வைத்தும் 3 அல்லது 4 தொகுதியில் மட்டுமே பாஜக வெற்றி பெற்றது. தேர்தலில் எந்த அனுபவமும் இல்லாத அண்ணாமலை முன் கட்சியின் மூத்த தலைவர்கள் அமர வேண்டிய துர்ப்பாக்கிய நிலையை பாஜக தலைமை ஏற்படுத்தி கொடுத்திருப்பது மிகவும் வெட்கக் கேடான செயல்" எனக் கூறினார்.