தமிழ் நாட்டில் ஊரகப் பகுதிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் கடந்த மாதம் 27, 30 என 2 தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற்றது.நடத்தப்பட்ட இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் ஜனவரி இரண்டாம் தேதி மற்றும் மூன்றாம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் தமிழகம் முழுவதும் 315 மையங்களில் வாக்குகள் எண்ணப்பட்டது. தேர்தல் நடந்த 27 மாவட்டங்களில் மொத்தம் உள்ள 515 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் 272 மாவட்ட கவுன்சிலர் பதவிகளை திமுக கைப்பற்றியுள்ளது. இந்த தேர்தலில் அதிமுக கூட்டணி 240 இடங்களை கைப்பற்றியுள்ளது. மேலும் ஒன்றிய கவுன்சிலரில் திமுக கூட்டணி 2356 இடங்களையும், அதிமுக கூட்டணி 2136 இடங்களையும் கைப்பற்றியுள்ளது. ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக அதிக இடங்களை கைப்பற்றியுள்ளது என்பது குறிப்படத்தக்கது.
இந்த நிலையில், ஊரக உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி தர்மத்திற்கு புறம்பாக திமுக செயல்பட்டுள்ளது என காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை வெளியிட்டுள்ளார்.அந்த அறிக்கையில்,ஊரக உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி கட்சியான திமுகவின் செயல்பாடுகள் கூட்டணி தர்மத்திற்கு புறம்பாக இருந்தது. ஒரு ஊராட்சி தலைவர், துணை தலைவர் பதவிகள் கூட காங்கிரசிற்கு வழங்கப்படவில்லை. 303 ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிகளில் இதுவரை மொத்தம் 2 இடங்கள்தான் திமுகவினால் வழங்கப்பட்டுள்ளது. 27 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளில் ஒரு மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகூட வழங்கவில்லை. மாவட்ட அளவில் பேசிமுடித்த எந்த ஒரு ஒத்துழைப்பும் இதுவரை கிடைக்கவில்லை என கூறப்பட்டுள்ளது.
கே.எஸ்.அழகிரியின் வெளிப்படையான அறிக்கை குறித்து திமுக எம்.எல்.ஏ அன்பழகன் கருத்து கூறியுள்ளார். அதில், கே.எஸ்.அழகிரியின் வெளிப்படையான அறிக்கை நல்லதல்ல என்றும், எதைவைத்து அழகிரி அவர்கள் இவ்வாறு ஒரு அறிக்கையை வெளியிட்டார் என தெரியவில்லை என்றும், அவர் கூறியுள்ளார். ஜெ. அன்பழகனின் இந்த கருத்தால் திமுக காங்கிரஸ் கட்சி இடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திமுகவின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் உள்ளாட்சியில் பதவி விவகாரத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளதால் இது குறித்து ஸ்டாலின் முக்கிய முடிவு எடுப்பார் என தகவல் சொல்லப்படுகிறது. மேலும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் வருகிற சட்ட மன்ற தேர்தலிலும் திமுக கூட்டணியுடன் காங்கிரஸ் தொடர் வேண்டும் என்பது தான் எங்களது விருப்பம் என்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறுவது தற்போது நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுகவின் செயல்பாடு குறித்து கூறிய கருத்து என்றும் கூறியுள்ளார்.