17-வது நாடாளுமன்றத் தேர்தலுக்கான திமுகவின் தென்சென்னை மக்களவைத் தொகுதி வேட்பாளராக தமிழச்சி தங்கப்பாண்டியன் அறிவிக்கப்பட்டார். நடனக் கலைஞர், இலக்கியவாதி, மேடைப்பேச்சாளர், அரசியல்வாதி எனப் பன்முகம் கொண்டவர் தமிழச்சி தங்கப்பாண்டியன். தமிழச்சி தங்கப்பாண்டியனின் தந்தை தங்கப்பாண்டியன், திமுக எம்.எல்.ஏ-வாக 1989 மற்றும் 1996-ம் ஆண்டுகளில் வெற்றி பெற்று பதவி வகித்தவர். நீண்ட காலமாகவே திமுகவின் மீது வாரிசு அரசியல் எனும் விமர்சனங்கள் இருந்து வருகிறது. அந்த வகையில் தற்போது தமிழச்சி தங்கப்பாண்டியனுக்கு வாய்ப்பு அளித்ததன்பின் இன்னும் அந்த சொல்லாடல் அதிகாமக ஒலிக்கத்தொடங்கியுள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் திமுக சார்பில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரை மேடையில் வாரிசு அரசியல் குறித்து தமிழச்சி தங்கப்பாண்டியன் பேசினார், அவர் பேசியதாவது,
“திமுகவில் இருக்கும் வாரிசுகள் எல்லாம் அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்போதும், அவர்களுக்கு ஏதோ நல்ல விஷயம் நடக்கும்போது மட்டும்தான் உங்கள் கண்களில் படுகிறார்களா. கட்சிக்காக மூன்று தலைமுறையாக திமுகவில் உறுப்பினர்களாக, பரம்பரை பரம்பரையாக திமுகவில் இருப்பவர்கள் போராட்ட காலங்களில் சிறைக்கு செல்லும்போதெல்லாம், அவர்களுடைய வாரிசுகளாகிய நாங்கள் எவ்வளவு துன்பதுயரத்திலே இருந்தோம் அப்போதெல்லாம் பத்திரிகைகளும், இன்று எங்களை வாரிசு அரசியல் என்று சொல்பவர்களும் ஏன் எந்த கேள்வியும் எழுப்பவில்லை.
என் தந்தை மிசா காலகட்டத்தில் ஒரு வருடம் சிறையில் இருந்தார். அப்போது நானும் என் தம்பியும் பள்ளிக் குழந்தைகள். நம்முடைய கழகத் தலைவர் ஸ்டாலின் உட்பட, மாநிலம் முழுவதும் உள்ள அத்துனை பேரையும் சிறையில் அடைத்துவிட்டார்கள். அதேநேரம் அவர்களை சிறையில் அடித்து துன்புறுத்துகிறார்கள் என்ற செய்திகள் மட்டும் வந்துகொண்டு இருக்கிறது. ஆனால் அவர்கள் எந்த சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று யாருக்கும் தெரியாது. அந்தசமயத்தில் என்னுடைய தாய் இரண்டு குழந்தைகளுடன் மதுரை ஆட்சியர் அலுவலகத்தின் வெளியே நின்றார். அவர் மட்டுமின்றி அன்று சிறையில் இருந்தவர்களின் குடும்பத்தினர்கள் அவர்கள் வாரிசுகளுடன்தான் ஆட்சியர் அலுவலகத்தின் வெளியே நின்றிருந்தனர் அப்போது யாரும் இந்தக் கேள்வியை கேட்கவில்லை.
மிசா காலகட்டத்தில் உறவினர்கள், நண்பர்கள் என யாரும் வீடுதேடி வரமாட்டார்கள். நீங்கள் தனித்துதான் விடப்படுவீர்கள். ஒரேயொரு தலைவர், ஒரேயொரு உறவு எனக்குத் தெரிந்து, மிசா காலத்தில் ஸ்ரீவில்லிபுத்தூரில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தொண்டர்களின் குடும்பம் மளிகை சாமான் வாங்குவதற்குக்கூட கஷ்டப்படுகிறார்கள் என்று அந்த தலைவர் மளிகை சாமானோடு தொண்டர்களின் வீட்டுக்கு சென்றார். அவர் ஒப்புயர்வற்ற, தமிழினத்தலைவர் கலைஞர். ஒவ்வொருவர் வீட்டுக்கும் சென்று ஆறுதல் தந்தார். அவருக்கும் அந்த குடும்பத்திற்கும் நாங்கள் பரம்பரை பரம்பரையாக விஸ்வாசமாகத்தான் இருப்போம்.
என்னுடைய வளைகாப்பு நிச்சயக்கப்பட்டுவிட்டது. அந்த நிகழ்ச்சிக்கு என்னுடைய தந்தையால் வரமுடியவில்லை. என் தந்தையுடன் எனக்கு மிகவும் உணர்வுபூர்வமான ஒரு உறவு உண்டு. ஒரு பெண்ணின் முக்கியமான அந்த நிகழ்வில் என் தந்தையால் பங்கேற்க முடியவில்லை. அவர் அப்போது கழகத்தினால் அறிவிக்கப்பட்ட போராட்டாத்தில் ஈடுபட்டு சிறையில் இருக்கின்றார். அந்த வளைகாப்பு நிகழ்ச்சியினை தென்னரசு பெரியப்பாதான் தந்தை இடத்தில் இருந்து நடத்தினார். இப்படி பெருமையோடுதான் அனைத்து போராட்டங்களுக்கும் செல்லுவோம். திமுகவின் அனைத்து மாநாடுகளுக்கும் குடும்பம் குடும்பமாக சென்று அமர்ந்திருப்போம்.
தலைவர் கலைஞர் அவர்கள் காவிரிப்பூம்பட்டினத்தில் சிலப்பதிகாரத்திற்கு கூடம் அமைத்தபோது நாங்கள் அத்துனைபேரும் பள்ளிக் குழந்தைகள். அப்போது குடும்பத்தோடு சென்று அந்த மூன்று நாள் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டோம். இப்படி எல்லாவாரிசுகளும் அந்த இயக்கத்திற்கு கடமைப்பட்டவர்கள்தான்.”