மாணவர்களுக்கு விலையில்லா செல்போன் வழங்கவேண்டும் என்று நாகை எம்.எல்.ஏ.வும், மஜக பொதுச்செயலாளருமான மு.தமிமுன்அன்சாரி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''கரோனா தொற்று காரணமாக இக்கல்வியாண்டு பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. அதனால் பள்ளிக்கூட வகுப்புகள் தற்போது இணையம் வழியாக (online) நடைப்பெற்று வருகின்றது. இந்த வழிமுறை தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது.
ஆனால் இந்த வாய்ப்பை எளிய குடும்பத்து பிள்ளைகள் பெற முடியாத சூழல் பரவலாக உள்ளது. இதை கவனத்தில் கொண்டு தமிழக அரசு 10-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு, 6 மாதங்களுக்கு இலவச இணைய வசதியுடன் கூடிய திறன் பேசிகளை (Smartphone) விலையில்லாமல் வழங்கிட வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
தற்போது பஞ்சாப் மாநில அரசு மாணவர்களுக்கு, இவ்வகை திறன்பேசி (Smartphone) எனப்படும் அலைபேசிகளை விலையில்லாமல் வழங்கும் திட்டத்தை அறிவித்து செயல்படுத்தி வருவதை முன்மாதிரியாக கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கிறோம்'' இவ்வாறு கூறியுள்ளார்.