Skip to main content

‘பொங்கலுக்கு ரூ.1,000 வழங்க வேண்டும்’ - இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல் 

Published on 30/12/2024 | Edited on 30/12/2024
Communist party of india insistence Rs 1,000 should be given for Pongal

பொங்கல் தினத்தையொட்டி தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு, இலவச வேட்டி, சேலைகள் மற்றும் ரொக்கப் பணம் வழங்கப்படுவது வழக்கம். அதன்படி 2025ஆம் ஆண்டு தைப்பொங்கலைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்குத் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்பு வழங்கிட அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது. வழக்கமாக வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகை, 2025ஆம் ஆண்டிற்கு வழங்கப்படாதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

இந்த நிலையில், பொங்கல் பண்டிகையையொட்டி குடும்ப அட்டைக்கு தலா ரூ.1,000 வழங்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் தமிழக அரசுக்கு வலியுறுத்தியுள்ளது. இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘வரும் 2025 தமிழ் புத்தாண்டு பொங்கல் திருநாளில் தைப்பொங்கலைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்குத் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்பு கொண்ட பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. வழக்கமாக வழங்கப்படும் ரொக்கத் தொகை குறித்து எப்போது அறிவிப்பு வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இந்த நிலையில் “ஒன்றிய அரசு போதிய நிதி ஒதுக்காததால், இந்த வரும் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரொக்கத் தொகை வழங்கப்படாது” என்று நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.  

பா.ஜ.க ஒன்றிய அரசு கடந்த 2021 புதிய ஆட்சி அமைந்தது முதல் நிதி ஒதுக்குவதில் பாராபட்சம் காட்டி வருகிறது என்பதுடன் தமிழ்நாட்டை வஞ்சித்து வருவது உண்மையாகும். இயற்கை பேரிடர்களால் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகி வரும் தமிழ்நாட்டில் நிவாரண பணிகளுக்கும், மக்கள் மறு வாழ்வை உறுதி செய்யவும் 2021 முதல் இதுவரை ஏற்பட்ட பேரிடர் பாதிப்புகளுக்கு ரூ.82 ஆயிரத்து 458 கோடி வழங்க வேண்டும் என ஒன்றிய அரசிடம் தமிழ்நாடு அரசு கோரியுள்ள நிலையில், அது ரூ.276 கோடி மட்டுமே வழங்கியிருப்பது எவ்வளவு பெரிய ஏமாற்றம் அளிக்கும் என்பதை தமிழக மக்கள் நன்கறிவார்கள். இவ்வளவு பெரிய நிதிச் சுமையை, கழுத்தை முறிக்கும் நிதி நெருக்கடி நிலவும் நிலையிலும், புதிய நிதிச் சுமைகளை தமிழ்நாடு அரசே தாங்கி, மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்பதை தமிழ்நாட்டு மக்கள் மறந்து விட மாட்டார்கள். 

நடப்பாண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும்  பள்ளிகளில் தமிழ்வழி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு “தமிழ் முதல்வன்” திட்டத்தில் மாதந்தோறும் உதவித் தொகை ரூ.1000ம் அரசு நிதியுதவி செய்து வருகிறது. இப்படி பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வரும் அரசு பொங்கல் திருநாளில் பரிசுத் தொகுப்புடன் மட்டுமே நிறுத்திக் கொள்வது ரொக்க தொகை கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு எதிர்பார்த்து காத்திருக்கும் மக்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் என்பதை கருத்தில் கொண்டு, நிதியமைச்சரின் முடிவின் மீது முதலமைச்சர் தலையிட்டு மறுபரிசீலனை செய்து, பொங்கல் திருநாளில் வழங்கப்படும் பரிசுத் தொகுப்புடன் ரொக்கத் தொகை குடும்பத்திற்கு தலா ரூ.1000 வழங்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு முதலமைச்சரை கேட்டுக் கொள்கிறது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்