அரியலூர் மாவட்ட ஆட்சியராக 01-07-2019ல் டி.ஜி.வினய் பொறுப்பேற்றார். பணியேற்று 3 மாதம் கூட ஆகவில்லை அதற்குள் அவர் மதுரை மாவட்ட ஆட்சியராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அரியலூர் மாவட்ட ஆட்சியராக ரத்னா நியமிக்கப்பட்டுள்ளார்.
ரத்னா
டி.ஜி.வினய் மூன்று மாதத்திலேயே இடமாற்றம் செய்யப்படுவதற்கான காரணம் என்னவென்று கேள்வி எழுப்பியதுடன், ஆளும் கட்சியினர் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களையும் சுமத்தியுள்ளார் செந்துறை வடக்கு திமுக ஒன்றியச் செயலாளர் மு.ஞானமூர்த்தி.
அவர் கூறுகையில், அரியலூர் மாவட்டத்தில் நீர்மேலாண்மைத் திட்டத்தின்கீழ் சுமார் ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட குளங்கள், ஏரிகள், வரத்து வாய்க்கால்கள் தூர்வார திட்டமிடப்பட்டு அதற்காக பல கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. கடந்த தேர்தலில் ஒரு சொட்டு நீர் கூட கடலில் கலக்க விட மாட்டோம் என்று நமது தமிழக முதல்வர் பொது மக்களுக்கு வாக்குறுதி வழங்கினார். அந்த வாக்குறுதியை 100 சதவீதம் உண்மையாக்க வரலாற்று சிறப்பு மிக்க அதிகாரிகளின் ஆய்வு கூட்டங்களை நடத்தி நிறைவேற்ற முயன்றவர் ஆட்சியர் டி.ஜி.வினய். முதல்வர் பொதுமக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற முயன்றதற்காக 100 நாளில் மதுரைக்கு மாற்றப்பட்டு உள்ளார்.
டி.ஜி.வினய்
அரியலூர் மாவட்டத்தில் 2471 ஏரிகள் கொண்ட மாவட்டம் என்ற பட்டியலை முதன் முதலில் பொது மக்கள் பார்வைக்கு வெளியிட்ட ஆட்சியர் டி.ஜி.வினய். அத்தனை (2471) ஏரிகளையும், குளங்களையும், குட்டைகளையும் சுற்றி அளந்து சர்வே கல் நட உத்தரவு வழங்கினார். கடலில் கொள்ளிடம் ஆற்றில் கலக்கும் பல டி.எம்.சி. நீரை அரியலூர் மாவட்டத்தில் தேக்க என்னென்ன செய்ய வேண்டும் என திட்டத்தை செயல்படுத்த முழு முயற்சி எடுத்தார்.
டி.ஜி.வினய் இடமாற்றத்தை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என அரியலூர் மாவட்ட பொதுமக்கள் எதிர் பார்க்கின்றார்கள். பதவி ஏற்ற நூறு நாளில் நூறு ஏரி குளங்களில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி சாதனை செய்தவர். 2471 ஏரி குளங்களின் பழைய நிலையை ஒரு ஆண்டில் கொண்டு வந்து அதிக நீரை தேக்கி வளமாக பகுதியாக மாற்ற நாள் முழுவதும் செயல்பட்ட நல்ல ஆட்சியர், இன்னும் சில ஆண்டுகள் அரியலூர் மாவட்டத்திற்கு தேவை என பொது மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
செந்துறை ஒன்றியத்தில் மட்டும் 153 குளங்கள், ஏரிகள் ஆழப்படுத்தவும், கரைகள் பலப்படுத்தவும் பெருந்தொகை ஒதுக்கப்பட்டது. அந்த தொகை முறையாக செலவழிக்கப்பட்டு ஏரி, குளங்கள் வெட்டப்படவில்லை. வரத்து வாய்க்கால்கள் சீரமைக்கப்படவில்லை. ஆனால் வேலை நடைபெற்றதாக பில் எடுக்க அதிமுகவினர் முயற்சி எடுத்தனர். பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் டி. ஜி. வினயிடம் புகார் அளித்தனர். புகார்களை பெற்றுக்கொண்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட ஏரி, குளங்களை பார்வையிட்டார்.
சென்ற வாரம் 04-10-2019 அன்று செந்துறை ஒன்றியம் ஆலத்தியூர் ஊராட்சியில் ரூ. 30 கோடியில் “பிரதான் மந்திரி கானிங் ஷேத்ரா கல்யாண் யோஜனா “ (PMKKKY) திட்டத்தின்கீழ் கட்டப்பட்டு வரும் வெள்ளாறு தடுப்பணை 400 மீட்டர் நீளம் கட்டுதல், இடது புறமும், வலது புறமும் 400 மீட்டர் நீளம் கரையை பலப்படுத்துதல். ஆனைவாரி ஓடையில் 275 மீட்டர் நீளத்தில் தடுப்பணை கட்டுதல். இடது, வலது புறத்தில் 400 மீட்டரில் கரையை பலப்படுத்துதல் ஆகிய பணிகளை ஆய்வு செய்தார்.
தளவாய், ஈச்சங்காடு, அயன்தத்தனூர் பெரிய ஏரி மற்றும் அயன்தத்தனூர் புது ஏரி ஆகி 4 ஏரிகளை ஆய்வு செய்தார். விவசாயிகளின் புகாரில் உள்ளபடியே ஏரி, குளங்கள் வெட்டப்படாத நிலையில் இருந்தது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து ஏரிகளை ஆழப்படுத்த வேண்டும், கரைகளை பலப்படுத்த வேண்டும், மதகு, கலுங்குகள், வரத்து வாய்க்கால்கள் சீரமைக்கப்பட வேண்டும், விவசாய நிலங்களுக்குச் செல்லும் வாயக்கால்கள் கட்டமைக்கப்பட வேண்டும் என எச்சரிக்கை செய்துவிட்டு சென்றார்கள்.
மேலும் இந்த ஏரிகள் மற்றும் தடுப்பணைகள் கட்டப்பட்டால் தளவாய் தெற்க்கில் 460 ஏக்கரும், ஆலத்தியூர் ஊராட்சியில் 160 ஏக்கரும், கடலூர் மாவட்டம் சம்பேரியில் 1500 ஏக்கரும் மொத்தம் 2110 ஏக்கர் நிலங்கள் பாசன வசதிபெறும் எனவும் தெரிவித்தார்.
மேலும் செந்துறை ஒன்றியத்தில் குடிநீர் பற்றாக்குறையைப் போக்க ஆழ்குழாய் கிணருக்கு ஒதுக்கப்பட்ட நிதி பல வழிகளில் முறைகேடாக செலவழிக்கப்பட்டிருக்கிறது. பல ஊராட்சிகளில் மின்மோட்டார்கள் பழுதடைந்ததாக காரணம் காட்டி போலி பில் வாங்கப்பட்டு பல லட்சம் ஊழல் நடைபெற்று உள்ளது.
மு.ஞானமூர்த்தி
மாவட்டம் முழுதும் அதிமுகவினர் ஏரி, குளங்களை வெட்டாமல் கையாடல் செய்திருப்பதை கண்டுபிடித்த ஆட்சியர் தொடர்ந்து இருந்தால் மேலும் ஊழல் செய்ய முடியாது என முடிவெடுத்து ஆளும்கட்சியினர் தங்களின் அதிகார துஷ்பிரயோகத்தால் மாவட்ட ஆட்சியரை இடமாற்றம் செய்துள்ளனர். இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம் என்றார்.
எஸ்.ராஜேந்திரன்
இதுகுறித்து அதிமுக சட்டமன்ற கொறடாவும், அரியலூர் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.ராஜேந்திரனை தொடர்பு கொண்டு கேட்டபோது, இது அவருடைய சொந்த கருத்து. இதைப்பற்றி அமைச்சர்தான் பதில் சொல்ல வேண்டும் என்று முடித்துக்கொண்டார்.