ஈரோடு தேர்தல் பிரச்சாரக்களம் சூடுபிடித்திருக்கும் நிலையில் இன்று ஈரோடு மாவட்டம் வீரப்பன் சத்திரத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், ''பாஜகவும் அதிமுக கூட்டணியில் உள்ளதா இல்லையா. ஒருவர் இருக்கிறது என்கிறார் ஒருவர் இல்லை என்கிறார். அவர்களுக்குள் முதலில் ஒரு முடிவுக்கு வரட்டும். அவர்களுக்குள் இப்பொழுது என்ன போட்டி இருக்கிறது என்று கேட்டால் இபிஎஸ் பெரிய ஆளா? ஓபிஎஸ் பெரிய ஆளா? யாருக்கு செல்வாக்கு அதிகம். கட்சிக்குள்ள யாருக்கு செல்வாக்கு அதிகம் என்பதான நிலைதான் அதிமுகவில் இருக்கிறது. முதலில் அவர்கள் ஒரு முடிவுக்கு வரட்டும். இப்பொழுது நான்காகவோ ஐந்தாகவோ பிரிந்து கிடக்கிறார்கள் என்று நினைக்கிறேன். எனக்கு சரியாக ஞாபகம் இல்லை அதனால் கேட்டேன்'' என்றார். அப்பொழுது செய்தியாளர் 'அதிமுகவுக்கு எதிர்காலம் என்று ஒன்று இருக்கிறதாக நீங்கள் நினைக்கிறீர்களா?' என கேட்க, ''கைலாச நாடு என்ற நாடு இருக்கிறதே அந்த மாதிரி ஏதாவது ஒரு நாட்டுக்கு போனார்கள் என்றால் புதிதாக ஆளுக்கு ஒரு பகுதிகளை பிரித்து இது ஓபிஎஸ் பகுதி; இது ஈபிஎஸ் பகுதி; இது டிடிவி பகுதி என இன்னும் எத்தனை டீம் இருக்கோ அத்தனையும் பிரித்துக் கொண்டு ஒவ்வொரு பகுதியாக ஆள முயற்சி செய்யலாம்'' என்றார்.
இந்நிலையில் எடப்பாடி பழனிசாமியிடம் இது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''அடிக்கடி நிறம் மாறக்கூடியவர். ஏற்கனவே ஐந்து கட்சிக்கு போயிட்டு வந்தவர். அடுத்த தேர்தல் வரும்போது எந்த கட்சியில் இருப்பார் என்று யாருக்கும் தெரியாது. மக்கள் தான் வாக்களிக்கிறார்கள் செந்தில்பாலாஜி ஒன்றும் ஜோசியம் சொல்ல முடியாது. மக்கள் கொந்தளிப்புடன் இருக்கிறார்கள். 21 மாத திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் எந்த திட்டமும் நிறைவேற்றப்படவில்லை. 1999-ல் பாஜகவுடன் திமுக கூட்டணியில் இருந்தது. அப்பொழுது ஐந்து வருடம் என்ன அடிமை சாசனம் எழுதி கொடுத்துவிட்டிருந்தார்களா? முரசொலி மாறன் நோய்வாய்ப்பட்டு கோமா ஸ்டேஜ்க்கு போய் விட்டார். அப்பொழுதுகூட அமைச்சரவையை விட்டு விலகவில்லை. அப்படிப்பட்ட, திமுக எங்களை பற்றிய விமர்சனம் செய்ய அவர்களுக்கு அருகதை கிடையாது.
அவர்களுடன் கூட்டணி வைத்திருக்கின்ற கட்சிகள் சொத்துவரி ஏறிப் போய்விட்டது ஏதாவது கோரிக்கை வைத்துள்ளார்களா? அதுவும் மக்களுடைய பிரச்சினை தானே. மக்களுக்கு ஏதாவது குரல் கொடுத்தார்களா? விலைவாசி உயர்வுக்கு எதிராக குரல் கொடுத்திருக்கிறார்களா? எங்கே பார்த்தாலும் போதைப் பொருள் நடமாட்டம். போதைப் பொருள் நடமாட்டம் இல்லாத இடமே இல்லை. அதை எப்போதாவது கண்டித்திருக்கிறார்களா? மின்சார கட்டணம் கடுமையாக உயர்ந்துள்ளது. வருடம் வருடம் ஆறு சதவீதம் உயர்ந்திருக்கிறது. அதற்கு ஏதாவது எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்களா? ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய பணப்பலன் கிடைக்கல. அதற்காக போராட்டம் செய்திருக்கிறார்களா? கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள் எட்டு வழி சாலையை நான் இருக்கும் போது எதிர்த்தார்கள். இப்பொழுது திமுக அந்த எட்டு வழிச் சாலையை கொண்டு வருகிறார்கள் அதற்கு கம்யூனிஸ்ட் கட்சி வாயில் பிளாஸ்திரி ஒட்டிக்கொண்டு மௌனம் சாதிக்கிறது. திமுக கூட்டணி கட்சிகள் பக்காவாக அடிமை சாசனம் எழுதி கொடுத்துவிட்டார்கள் திமுகவிற்கு''என்றார்.