Skip to main content

"தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெடவில்லை; கெடுக்கலாமா என்று சதி செய்கிறார்கள்" - முதல்வர் ஸ்டாலின்

Published on 30/11/2022 | Edited on 30/11/2022

 

cm stalin talk about law and order issue

 

தமிழ் நாட்டில் சட்டம் ஒழுங்கு கெடவில்லை. ஆனால் கெடுக்கலாமா என்று சிலர் சதி செய்கிறார்கள் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 

முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று (29.11.2022) அரியலுார் மாவட்டம்  கொல்லாபுரத்தில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்துகொண்டு அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்திற்கான முடிவுற்ற திட்டப் பணிகளைத் திறந்து வைத்து புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

 

அதன் பின் பேசிய அவர், "கடந்த ஆட்சியில், பத்தாண்டுக் காலம் தொழில் வளர்ச்சியில் தேக்க நிலை நிலவினாலும் அதற்கு முன்பு தலைவர் கலைஞர் தலைமையிலான திமுக அரசு போட்ட அடித்தளத்தாலும், கடந்த 18 மாதங்களாக எட்டுக் கால் பாய்ச்சலில் நாம் ஈர்த்து வரும் முதலீடுகளாலும் பெற்ற பெருமைதான் என்பதை நீங்கள் மறந்துவிட வேண்டாம். நான் இப்போது கூறிய இரண்டுமே தனித்தனி நிகழ்வுகள் அல்ல. ஒன்றோடு ஒன்று தொடர்பு உடையது. 2030-க்குள் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாகத் தமிழ்நாட்டை உயர்த்துவோம் என்ற இலக்கின் வெவ்வேறு பரிமாணங்கள்தான் இவை.

 


நான் முதல்வன் திட்டமானாலும்; ஐடிஐ தொழிற்பயிற்சி நிலையங்களை 2 ஆயிரத்து 200 கோடி ரூபாயில் தொழில்நுட்ப மையங்களாக மேம்படுத்துவதானாலும்; பள்ளிக்கல்வியிலும், உயர்கல்வியிலும், நாம் மேற்கொண்டு வரும் முயற்சிகளானாலும்; புதிதாக வளர்ந்து வரும் உற்பத்தித் துறைகளில் முதலீடுகளை ஈர்ப்பதானாலும்; நான்காம் தொழிற்புரட்சியை ஒட்டிய முயற்சிகள் ஆனாலும் – அனைத்துமே நம் இலக்கை நோக்கிய ஒருங்கிணைந்த திட்டமிடலின் அங்கங்கள்தான். இத்தகைய தொலைநோக்குப் பார்வையோடு திட்டமிட்டால்தான், இலக்கை அடையமுடியும். 

 

இதில் அரியலூர், பெரம்பலூர் என அனைத்து மாவட்டங்களின் பங்களிப்பும் இருக்கவேண்டும். அனைத்துத் தரப்பினரும் பயன்பெற வேண்டும். அடுத்த சில ஆண்டுகளில் பின்தங்கிய பகுதி, மாவட்டம் என்று எதுவும் தமிழ்நாட்டில் இருக்கக்கூடாது. அதை நோக்கித்தான் உழைத்து வருகிறோம். இவை அனைத்தும் ஒரு ஆட்சி எப்படி நடக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக திமுக அரசு நடத்திக் காட்டும் செயல்கள். ஒரு ஆட்சி எப்படி நடக்கக் கூடாது – ஒரு முதலமைச்சர் எப்படி நடந்து கொள்ளக் கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டுதான் கடந்த கால ஆட்சி.

 

தனது கையில் அதிகாரம் இருந்தபோது கைக்கட்டி வேடிக்கை பார்த்துவிட்டு தனது கையாலாகாத தனத்தை வெளிப்படுத்தி பத்தாண்டுக் காலத்தை நாசமாக்கியவர்கள். இன்று இதையெல்லாம் மக்கள் மறந்திருப்பார்கள் என்று நினைத்து புகார்கள் கொடுக்கிறார்கள். பேட்டிகள் அளிக்கிறார்கள். அதையெல்லாம் மக்கள் பார்த்துச் சிரிக்கிறார்கள். 'உங்கள் யோக்கியதைதான் எங்களுக்குத் தெரியுமே' என்று ஏளனமாகச் சிரிக்கிறார்கள்.  தமிழ் நாட்டில் சட்டம் ஒழுங்கு கெடவில்லை. ஆனால், கெடுக்கலாமா என்று சிலர் சதி செய்கிறார்கள். ஐயகோ கெடவில்லையே என்று சிலர் வருத்தப்படுகிறார்கள்” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்