Skip to main content

“திமுக வலியுறுத்தியதை முதல்வர் ஸ்டாலின் செய்ய வேண்டும்” - டாக்டர் ராமதாஸ் கோரிக்கை..! 

Published on 07/05/2021 | Edited on 07/05/2021

 

"Chief Stalin should do what DMK insisted" - Dr. Ramdas demand ..!

 

முதல்வராக பொறுப்பேற்றுள்ள மு.க. ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்திருக்கும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், மதுக்கடைகள் மூடப்பட வேண்டும் என்று திமுக வலியுறுத்தியதை இந்த நேரத்தில் சுட்டிக்காட்டியிருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளைப் பட்டியலிட்டால் அதில் முதலிடம் அளிக்கப்பட வேண்டியது மதுக்கடைகளை மூடும் முடிவுதான். காரணம், கரோனா வைரஸ் பரவுவதற்கான முதன்மைக் காரணங்களில் ஒன்று மது ஆகும். மதுக்கடைகளில் மது வாங்குவதற்காக கூட்டம் முண்டியடிக்கும்போது, அந்தக் கூட்டத்தில் ஒருவருக்கு கரோனா வைரஸ் தொற்று இருந்தால், அது அங்கு நெருக்கமாக இருக்கும் அனைவருக்கும் எளிதாக பரவிவிடும். 

 

அதுமட்டுமின்றி, மது அருந்தும்போது நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால் கரோனா வைரஸ் மிகவும் எளிதாக தாக்கிவிடும் என்பதால், மது குடிப்பதை தடை செய்ய வேண்டும் என்று உலகில் உள்ள அனைத்து நாடுகளையும் உலக சுகாதார நிறுவனம் கேட்டுக்கொண்டிருக்கிறது. அதனால்தான் மதுக்கடைகளை மூட ஆணையிடுமாறு கடந்த ஒரு மாதமாக தமிழக அரசை வலியுறுத்தி வருகிறேன். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மது வணிக நேரத்தை குறைப்பதாகக் கூறுவதெல்லாம் ஏமாற்று வேலைதான். தமிழகத்தில் மதுக்கடைகள் தினமும் 10 மணி நேரம் திறந்திருந்தாலும், 3 மணி நேரம் மட்டுமே திறந்திருந்தாலும் விற்பனை குறையாது என்பதை தமிழகத்தின் மது வணிகம் குறித்த நுட்பம் தெரிந்தவர்கள் அறிவர். 

 

மதுக்கடைகளுக்கு இரு நாள் விடுமுறை விடப்பட்டால், அதற்கு முந்தைய நாளில் வணிகம் மும்மடங்கு அதிகரிப்பதும், ஒருநாள் விடுமுறை விடப்பட்டால் அதற்கு முந்தைய நாளில் மது வணிகம் இரு மடங்கு அதிகரிப்பதும், இந்த சூத்திரத்தின் அடிப்படையிலானதுதான். கடந்த காலங்கள் நினைவுக்கு வந்தால், இந்த உண்மையை இன்றைய முதலமைச்சர் ஸ்டாலினாலும் உணர்ந்துகொள்ள முடியும். கடந்த ஆண்டு மார்ச் மாதம் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டபோது மதுக்கடைகளை மூடுவது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. உடனடியாக அப்போதைய  முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு மதுக்கடைகளை மூட வேண்டும் என்று நான் கேட்டுக்கொண்டதைத் தொடர்ந்து, அதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டது. 

 

அதன்பின் கரோனா பரவல் குறைந்துவிட்டதாகக் கூறி மே 7ஆம் தேதி, அதாவது கடந்த ஆண்டு இதே மாதம் இதே நாளில் சென்னை தவிர்த்த மாவட்டங்களில் மதுக்கடைகள் மீண்டும் திறக்கப்படும் என்று அரசு அறிவித்தது. அதை பாமக கடுமையாக எதிர்த்தது. திமுக இன்னும் ஒரு படி கூடுதலாக, மதுக்கடைகள் திறக்கப்படுவதை எதிர்த்து கடந்த ஆண்டு இதே நாளில் அறப்போராட்டம் நடத்தியது. சென்னையில் தமது வீட்டுக்கு முன்பாக, “அடித்தட்டு மக்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் வழங்கு. கரோனா காலத்தில் டாஸ்மாக் எதற்கு?’’ என்ற பதாகையை ஏந்தி போராட்டம் நடத்திய அன்றைய எதிர்க்கட்சித் தலைவர், இன்று முதலமைச்சராகியுள்ள நிலையில், அதே அக்கறை மற்றும் பொறுப்புணர்வுடன் தமிழ்நாட்டில் உடனடியாக முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும், தமிழ்நாடு முழுவதும் மதுக்கடைகள் மூடப்படும், அடித்தட்டு மக்களுக்கு ரூ. 5,000 வழங்கப்படும் என்பன உள்ளிட்ட அறிவிப்புகளை இன்றே வெளியிட வேண்டும்” என்று கேட்டுக்கொண்டிருக்கிறார் டாக்டர் ராமதாஸ்.

 

 

சார்ந்த செய்திகள்