அடுத்த வருடம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவிற்கு எதிராகக் கூட்டணி அமைப்பது குறித்துப் பல்வேறு எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பேசி வருகின்றனர். அந்த வகையில் பீகார் மாநிலம் பாட்னாவில் எதிர்க்கட்சித் தலைவர்களின் முதல் கூட்டம் கடந்த 23 ஆம் தேதி நடைபெற்றது. இந்த மாநாட்டில் ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 16 கட்சிகள் பங்கேற்றன. ஆறு மாத காலத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில் இந்த ஆலோசனைக் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்பட்டது. இதில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினும் திமுக சார்பில் கலந்து கொண்டு பல்வேறு கருத்துக்களை முன்வைத்திருந்தார்.
இதையடுத்து எதிர்க்கட்சித் தலைவர்களின் 2வது ஆலோசனைக் கூட்டம் பெங்களூருவில் இன்றும்(17.7.2023), நாளையும்(18.7.2023) நடைபெற உள்ளது. இந்த கூட்டத்திற்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமை தாங்க உள்ளார். இந்த கூட்டத்திற்குக் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி கலந்துகொள்ள உள்ளார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக இன்று காலை 11.20 மணிக்கு சென்னை விமான நிலையத்திலிருந்து விமானம் மூலம் பெங்களூரு புறப்பட்டு செல்லும் முதல்வர் மாலையில் நடைபெறும் விருந்திலும், நாளை நடைபெற உள்ள ஆலோசனை கூட்டத்திலும் கலந்துகொள்கிறார். 2 நாள் கூட்டத்தை முடித்துக்கொண்டு பெங்களூரில் இருந்து நாளை இரவு 9 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் சென்னை திரும்புகிறார். மேற்கு வங்க முதல்வர் மம்தா இன்று நடைபெறும் விருந்தில் கலந்துகொள்ளவில்லை என்றும், நாளை நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் தான் கலந்துகொள்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.