திமுக தொடங்கி 75 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி பவள விழாவும், ஆண்டுதோறும் கொண்டாடப்படும் முப்பெரும் விழாவும் சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் இன்று (17.09.2024) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திமுக முப்பெரும் விழாவில் ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் மூலம் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர் உரையாற்றினார். இதனையடுத்து தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின், பெரியார் விருது பாப்பம்மாளுக்கும், அண்ணா விருது அறந்தாங்கி 'மிசா' இராமநாதனுக்கும், பாவேந்தர் விருது கவிஞர் தமிழ் தாசனுக்கும், பேராசிரியர் விருது வி.பி. ராசனுக்கும், கலைஞர் விருது எஸ். ஜெகத்ரட்சகனுக்கும், மு.க. ஸ்டாலின் விருது எஸ்.எஸ். பழனிமாணிக்கத்திற்கும் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து ‘கழகம் நல்ல கழகம்’ என்ற பாடலுடன் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது உரையைத் தொடங்கினார். அப்போது அவர் தொண்டர்கள் மத்தியில் பேசுகையில், “உங்களுடைய வேர்வை, ரத்தம், மூச்சுக்காற்றால் தான், இத்தனை ஆண்டு காலம் திமுக தலை நிமிர்ந்து, கம்பீரமாக நிற்கிறது. நீங்கள் இல்லாமல், திமுக இல்லை, நீங்கள் இல்லாமல் நான் இல்லை. அந்த நன்றி உணர்ச்சியோடு தான் உங்கள் முன் கம்பீரமாக நின்று கொண்டு இருக்கிறேன். திமுகவின் பவள விழா, முப்பெரும் விழா என இந்த விழாவை ஏற்பாடு செய்திருக்கும் மாரத்தான் அமைச்சர் மா. சுப்பிரமணியனிடம் எந்தப் பணியைக் கொடுத்தாலும் சிறப்பாகச் செய்து காட்டுவார் என்பதற்கு இந்த விழா எடுத்துக்காட்டு.
14 நாட்கள் அமெரிக்கப் பயணத்தை முடித்துவிட்டு சென்னை திரும்பினேன். தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்க சென்றோம் என்று சொல்வதை விட வென்றோம் தான் சொல்ல வேண்டும். இதன் மூலம் பல்லாயிரக்கணக்கான முதலீடுகளும், பல்லாயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளும் கிடைத்திருக்கிறது. அதை எண்ணி நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது. அமெரிக்க வாழ் தமிழர்கள் கொடுத்த வரவேற்பு, இந்தியாவின் மற்ற மாநில மக்களும் வியந்து பேசும் அளவிற்கு ரீச் ஆச்சு. அதற்குக் காரணம் நாம் எப்போதும் மக்களோடு, மக்களாக இருக்கிறோம்.
கடந்த 1966ஆம் ஆண்டு என்னுடைய 13 வயதில் கோபாலபுரம் இளைஞர் திமுகவைத் தொடங்கியதில் தொடர்ந்த பயணம் 53 ஆண்டுக்காலம் திமுகவிற்கும், மக்களுக்கும் உழைத்த, உழைப்பிற்கும் கிடைத்த வெற்றி தான் இன்று பவள விழா காணும் திமுகவிற்கு தலைவராக நான் இருக்கிறேன். திமுகவும், தமிழ்நாடும் எனது இரு கண்கள் என்று இருக்கும் நேரத்தில் திமுகவின் பவள விழாவை கொண்டாடுவது என்னுடைய வாழ்நாள் பெருமை. ஒரு இயக்கம் 75 ஆண்டுகள் கழித்தும் கம்பீரமாக இருப்பது சாதாரண விஷயம் அல்ல. இதற்கு முழுமுதற் காரணம் நம்முடைய அமைப்பு தான் என்பதை நெஞ்சை நிமிர்த்திச் சொல்வேன். 1977ஆம் ஆண்டு தேர்தலில் திமுக தோல்வி அடைந்த போது திமுக முடிந்தது எனச் சொன்னார்கள்.
இருப்பினும் கடந்து வந்த 75 ஆண்டுகளில் எத்தனையோ சாதனைகளைச் செய்துள்ளோம். திமுகவின் தேவை இன்னும் 100 ஆண்டுகளுக்கு இருக்கிறது. எந்தவொரு மாநில அரசும் செய்யாத வகையில் தமிழகத்தை திமுக அரசு வளப்படுத்தி இருக்கிறது. தலைவர், தொண்டர் என இல்லாமல் அண்ணன், தம்பி என்று கட்டமைக்கப்பட்ட இயக்கம் திமுக. அடுத்து வரும் தேர்தல்களிலும் திமுகவே வெற்றி பெறும். 2026 தேர்தல் தான் நமது இலக்கு இதை நான் ஆணவத்தில் சொல்லவில்லை. இதுவரைக்கும், இப்படி ஒரு வெற்றியை எந்தக் கட்சியும் பெற்றது இல்லை என வரலாறு சொல்ல வேண்டும். தொண்டர்கள் மீதான நம்பிக்கையில் இதனைச் சொல்கிறேன். திமுகவுக்குத் தித்திக்கும் கொள்கை இருக்கிறது. கொள்கையைக் காக்கும் படையாகத் தொண்டர்கள் இருக்கிறார்கள். தொண்டர்களின் வீரத்தால் துணிச்சல் பெற்ற தலைமை இருக்கிறது. நூற்றாண்டை நோக்கி முன்னேறுவோம்” எனப் பேசினார்.