Skip to main content

‘திமுகவின் ஃபைல்கள்’; அண்ணாமலை அறிவிப்பு; ரஃபேல் வாட்ச் பில்?

Published on 13/04/2023 | Edited on 13/04/2023

 

Corruption list tomorrow morning; Annamalai Notification

 

இந்தாண்டின் ஜனவரி மாதத்தில் பாஜகவின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில் கட்சியின் வருங்கால நிகழ்ச்சிகள் தொடர்பான குறிப்புகள் வெளியிடப்பட்டது. அதில், பாஜக தலைவர் அண்ணாமலை ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி மாநில அளவிலான சுற்றுப் பயணத்தை திருச்செந்தூரில் இருந்து துவங்க இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. இது குறித்தான முழு விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த நடைப்பயணத்தில் பெரும்பாலான தொண்டர்கள் பங்கேற்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. 

 

சில மாதங்களுக்கு முன்பு ரஃபேல் வாட்ச் விவகாரம் பூதாகரமாக வெடித்தபோது, விரைவில் மாநிலம் முழுவதும் பாதயாத்திரை மேற்கொள்ள உள்ளேன். பாதயாத்திரையின் முதல் நாளில் எனது சொத்து விவரங்களை வெளியிடுவேன் என்று அண்ணாமலை தெரிவித்திருந்தார். இதுகுறித்து அவர் ட்விட்டரில் தெரிவித்ததாவது, “திமுகவினர் என்னுடன் ஊழல் குறித்து விவாதிக்க விரும்புவதால், நான் அதை எதிர்கொள்ள ஆவலுடன் இருக்கிறேன். 

 

நான் தமிழக பாஜக தலைவராகப் பொறுப்பேற்றதுக்கு முன்பு, மே மாதம் 2021ல் வாங்கிய எனது ரஃபேல் கடிகாரத்தின் விவரங்கள்; அதன் ரசீது மற்றும் எனது வாழ்நாள் வருமான வரி அறிக்கைகள்; 10 ஆண்டுக்கால எனது வங்கிக் கணக்குகளின் பரிவர்த்தனைகள் (எனது ஒவ்வொரு வருமானமும் காட்டப்படும்), ஆகஸ்ட் 2011 முதல் ஐபிஎஸ் அதிகாரியாக நான் பொறுப்பேற்றது முதல் ராஜினாமா செய்யும் வரை ஈட்டிய வருமானம்; எனக்குச் சொந்தமான அசையும் அசையா சொத்துகளின் விவரங்கள்; என்னிடம் உள்ள ஆடு மற்றும் மாடுகளின் எண்ணிக்கை என அனைத்தையுமே விரைவில், நமது பிரதமரே போற்றும் நம் தமிழக மக்களைச் சந்திப்பதற்காக மாநிலம் முழுவதும் நான் மேற்கொள்ளவிருக்கும் பாதயாத்திரையின் முதல் நாளில் வெளியிடுவேன். 

 

அன்றைய தினம் நான் பத்திரிகையாளர்களைச் சந்தித்து மேல் குறிப்பிட்ட அனைத்து விபரங்களையும் பொதுவெளியில் வெளியிட உள்ளேன். நான் அறிவித்ததை விட ஒரு பைசா அதிகமான சொத்தை யாரேனும் கண்டுபிடித்தால், எனது சொத்துக்கள் அனைத்தையும் அரசிடம் ஒப்படைக்க நான் தயார்” எனக் கூறியிருந்தார்.

 

 

இந்நிலையில், தனது நடைப்பயணத்தை அறிவித்துள்ள அண்ணாமலை தான் சொல்லியபடி ரஃபேல் வாட்ச் பில் மற்றும் திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிடுவாரா என இணையவாசிகள் கேள்வி எழுப்பி வந்தனர். தற்போது பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பதிவில் ‘திமுகவின் ஃபைல்கள்’ எனக் குறிப்பிட்டு ‘ஏப்ரல் 14, 2023 - காலை 10:15’ எனக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் பதிவிட்ட காணொளியில் கலைஞர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கனிமொழி, உதயநிதி ஸ்டாலின் போன்றோரது படங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் நாளை நடைப்பயணம் மேற்கொள்வாரா என்பது குறித்தும் ரஃபேல் வாட்ச் பில் விவகாரம் குறித்தும் எந்த ஒரு விபரமும் குறிப்பிடப்படவில்லை. 

 

 

சார்ந்த செய்திகள்