சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் இஎஸ்ஐ மருத்துவமனைகளின் இயக்குநர் டாக்டர் ஜெய.இராஜமூர்த்தி மகன் இரா.சாரங்கராஜன் (எ) சஞ்சய் - ச.கீர்த்தனா ஆகியோரது திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
அதனைத் தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “இன்றைக்கு ஒருவர் வள்ளலார் பற்றி புலம்பிக்கொண்டு இருக்கிறார். அவர் யார் என்று அனைவருக்கும் தெரியும். இன்று நாடு சென்று கொண்டிருக்கிற நிலைகள் எல்லாம் தெரியும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் எந்த ஒரு நல்லாட்சியை உருவாக்கித் தர துணைநின்றீர்களோ, அந்த ஆட்சி திராவிட மாடல் ஆட்சியாக எழுச்சியோடு நடைபெற்று கொண்டிருக்கிறது.
தேர்தல் நேரத்தில் வழங்கிய உறுதிமொழிகள் மற்றும் வாக்குறுதிகளை எல்லாம் எந்த அளவிற்கு தொடர்ந்து நிறைவேற்றிக் கொண்டிருக்கிறதோ அதுபோல் இந்திய நாட்டிற்கு ஒரு ஆட்சி தேவை. காரணம் இன்றைக்கு மத்தியில் இருக்கக் கூடிய பாஜக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து இன்றுவரை தேர்தல் நேரத்தில் அறிவித்த திட்டங்களையும் நிறைவேற்ற முன்வரவில்லை. அதற்கு நேர்மாறாக மக்கள் விரோதப் போக்கோடு மதத்தை, சனாதனத்தை மக்களிடத்தில் திணித்து ஒரு சர்வாதிகார ஆட்சியை பாஜகவினர் நடத்திக் கொண்டிருக்கின்றனர்.
அண்மையில் கூட பொது சிவில் சட்டத்தை கொண்டு வருவதாக அறிவித்திருக்கிறார்கள். பொது சிவில் சட்டம் என்று நாட்டில் ஏற்கனவே இருக்கிற சிவில் மற்றும் கிரிமினல் சட்டங்களை நீக்கிவிட்டு பாஜகவின் கொள்கைகளை எதிர்க்கக் கூடியவர்களை எல்லாம் பழிவாங்கும் நோக்கத்தில் கொண்டுவந்து மக்களுக்கு துன்பங்களை, கொடுமைகளை கொடுக்க வேண்டும் என்கிற தீய சக்தியாக பாஜக செய்து கொண்டிருக்கிற காரியங்களை எல்லாம் பார்த்து கொண்டிருக்கிறோம். ஏற்கனவே பாஜகவை எதிர்க்கக் கூடிய அரசியல்வாதிகளை எல்லாம் சிபிஐ, வருமான வரித்துறை, அமலாக்கத்துறை எல்லாம் வைத்து மிரட்டிக் கொண்டிருக்கிற ஆட்சியாக மத்திய பாஜக ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது.
திமுக குடும்ப கட்சியாக, இது எங்கள் குடும்பத்தில் நடைபெறுகிற நிகழ்ச்சி என்று இங்கு சொன்னார்கள். இதனைக் கேட்டால் பிரதமருக்கு கோபம் கூட வந்துவிடும். பிரதமர் மத்தியப்பிரதேசத்தில் பேசியபோது கூட திமுக பற்றிய நினைப்பு வந்துள்ளது. அப்போது அவர் பேசுகையில் திமுகவினர் குடும்பத்தின் வளர்ச்சிக்காக கட்சி நடத்துகிறார்கள் என்று சொல்லி இருக்கிறார். அதற்கு அடுத்த நாளே நான் இது குறித்து பேசுகையில் திமுக குடும்ப கட்சி தான். அண்ணாவால் உருவாக்கப்பட்ட, கலைஞரால் வளர்க்கப்பட்ட திமுக குடும்ப கட்சி தான். இன்னும் சொல்லப்போனால் தமிழ்நாடே திமுகவின் கட்சிதான். தமிழ்நாடே கலைஞரின் குடும்பம் தான் என்று சொல்லி இருக்கிறேன்” எனத் தெரிவித்தார்.