தமிழகத்திற்கான தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, 15 நாட்கள் அரசு முறைப் பயணமாகத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா சென்றுள்ளார். இதனையடுத்து பல்வேறு நிறுவனங்களுடன் தொடர்ந்து புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி வருகின்றன. அதே சமயம் சென்னையில் பார்முலா 4 கார் பந்தயம் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த பந்தய தடம் சென்னை தீவுத் திடலில் தொடங்கி, போர் நினைவுச் சின்னம், நேப்பியர் பாலம், சுவாமி சிவானந்தாசாலை, அண்ணாசாலை வழியாக 3.5 கி.மீ., தூரத்தைக் கடந்து தீவுத் திடலிலேயே வந்து முடிவதாக இருந்தது.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோயில்பட்டியில் அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது இந்த விவகாரங்கள் தொடர்பாக அவர் பேசுகையில், “தமிழ்நாட்டில் ஏராளமான பிரச்சனைகள் இருக்கும் போது வெளிநாட்டிற்குச் சென்று முதலமைச்சர் சைக்கிள் ஓட்டுவதும், உடற்பயிற்சி செய்வதும் ஏன் என்று எனக்குத் தெரியவில்லை. மேலும் எனக்குக் கிடைத்த தகவல்படி, முதல்வர் சிகிச்சை பெறுவதற்காக வெளிநாடு சென்று இருக்கிறார் என்று பரவலாகப் பேசப்படுகிறது. அதனை மறைத்து தொழிலில் முதலீட்டை ஈர்க்கப் போகிறேன் என்று செய்தியை முதல்வர் சொல்லியுள்ளார். எனக்குக் கூட கால் வலி இருந்தது என்று அதற்குச் சிகிச்சை பெற வேண்டும் எனக் கூறியுள்ளேன்.
மனிதர்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்படுவதும் அதற்கு மருத்துவரிடம் சிகிச்சை பெறுவதும் வழக்கம் தான். எனவே உண்மையைச் சொல்லிவிட்டு முதலமைச்சர் வெளிநாடு சென்று இருக்கலாம். இது உண்மையா பொய்யா என்று முதலமைச்சர் தான் விளக்க வேண்டும். தமிழகத்தில் மக்களின் போக்குவரத்து அதிகம் உள்ள பகுதி,ரயில் நிலையம் உள்ள பகுதிகளில் கார் பந்தயம் நடத்துகிறார்கள். சென்னையின் மத்திய பகுதியில் கார் பந்தயம் நடத்த என்ன அவசியம் உள்ளது” எனத் தெரிவித்தார்.