Skip to main content

திமுகவினருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் முக்கிய அறிவுறுத்தல்!

Published on 05/11/2024 | Edited on 05/11/2024
CM MK Stalin key instruction for DMK party member

திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின், தமிழகம் முழுவதும் கட்சி ரீதியிலான ஆய்வுக் கூட்டத்தை நடத்தத் திட்டமிட்டிருக்கிறார். அந்த வகையில் முதல் ஆய்வுக் கூட்டம் கோவை திமுகவில் நடைபெற்றது. அப்போது கோவை திமுகவினருடன் மினிட் புத்தகத்தை எடுத்துவரச் செய்து அதனை ஆய்வு செய்தார். ஒரு மாதத்தில் எத்தனைக் கூட்டங்கள் மாவட்ட அளவில் நடத்தப்பட்டிருக்கிறது?. வருடத்தில் எத்தனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன?. கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் யார்?. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் என்ன? என்பது பற்றியெல்லாம் தீர ஆராய்ந்துள்ளார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.

இதனைத் தொடர்ந்து  திமுகவினருடன் பேசிய முதல்வர் ஸ்டாலின், “எந்த எதிர்பார்ப்புமின்றி திமுகவிற்காக உழைக்கும் தொண்டர்களுக்கு நாம் என்ன செய்கிறோம் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். உங்களுக்குக் கீழாக உள்ள திமுக தொண்டர்களுக்கு நீங்கள்தான் பலமாகவும், பாலமாகவும் இருக்க வேண்டும். இளைஞர்களிடம் கட்சியின்  கொள்கைகளை விதைப்பது மிக முக்கியம். இளைஞர்கள் தான் எதிர்காலத்திற்கான விதைகள். பேச்சாளர்களை அழைத்து பாசறைக் கூட்டங்களை நடத்துங்கள். ஒவ்வொரு பகுதியிலும் கொள்கை வீரர்களாக பத்து அல்லது பதினைந்து இளைஞர்களை உருவாக்க வேண்டியது உங்கள் ஒவ்வொருவரின் கடமை.

கட்சி நிர்வாகிகள் அனைவரும், அவரவர்களது குடும்பத்திற்கும் நேரத்தைச் செலவிடுங்கள். தொழில் செய்பவர்களாக இருந்தால் அதற்கும் கவனம் செலுத்துங்கள். அதே சமயம் ஒரு நாளில் இரண்டு மணி நேரத்தைக் கட்சிக்காக ஒதுக்குங்கள். வார இறுதியில் ஒரு நாளை முழுமையாகக் கட்சி பணிக்கு ஒதுக்குங்கள். திமுகவிற்கு உள்ள கட்டமைப்பு தமிழ்நாட்டில் வேறு எந்தக் கட்சிக்கும் இல்லை. நாம் நினைத்தால் எந்தச் செய்தியையும் நினைத்த நேரத்தில் ஆறரைக் கோடி வாக்காளர்களிடமும் கொண்டு சேர்த்துவிட முடியும். எனவே நம் சாதனைகளைக் கொண்டு சேர்க்கும் பணிகளைச் செய்ய வேண்டும்” என்றெல்லாம் திமுகவினரைக் கேட்டுக் கொண்டதுடன் பல்வேறு வலியுறுத்தல்களையும் செய்திருக்கிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின். 

சார்ந்த செய்திகள்