அ.தி.மு.க செயற்குழு கூட்டம் இன்று காலை சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் முதல்வர் வேட்பாளர் குறித்து ஓ.பி.எஸ், இ.பி.எஸ் இடையே பெரும் விவாதாதம் நடந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இன்று நடந்த அ.தி.மு.க.வின் செயற்குழு கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. அதில் மிகமுக்கியமானது, 2021 சட்டமன்றத் தேர்தலுக்கான அ.தி.மு.க முதல்வர் வேட்பாளர் குறித்தானது. முதல்வர் வேட்பாளர் குறித்து பேச்சு எழுந்தபோது, “நான் தற்போதைய ஆட்சிக்கு மட்டுமே துணைமுதல்வராக இருக்க சம்மதித்தேன். நான் ஜெயலலிதாவல் அடையாளம் காட்டப்பட்டு முதல்வரானவன். உங்களை முதல்வராக்கியது சசிகலா” என்று தெரிவித்திருக்கிறார்.
இதற்குப் பதில் அளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “இருவருமே முதல்வரானது சசிகலாவால்தான். நான் முதல்வராக சிறப்பாகச் செயல்படவில்லையா? பிரதமர் மோடியே எனது ஆட்சியைப் பாராட்டியிருக்கிறார். கரோனா நேரத்திலும் சிறப்பாகச் செயல்பட்டுவருகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார். இந்நிலையில்தான் கூட்டம் முடிந்து வெளியே வந்த கே.பி.முனுசாமி, “வரும் 7ஆம் தேதி அ.தி.மு.க.வின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வமும் துணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமியும் அறிவிப்பார்கள்” எனத் தெரிவித்திருக்கிறார்.