நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது உறுதி என்று அறிவித்திருந்தார். அதேபோல் 234 தொகுதிகளிலும் வருகிற சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவேன் என்று கூறியிருந்தார். அரசியலுக்கு வருவேன் என்று அறிவித்த நடிகர் ரஜினி ஆன்மீக அரசியலை முன்னெடுத்து செல்வேன் என்று கூறினார். மதம், சாதி வேறுபாடு இல்லாத அரசியலாக இருக்கும் என்றும் சிஸ்டம் சரியில்லை என்றும் கூறினார். ரஜினியின் இந்த பேச்சு அரசியல் கட்சியினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சமீபத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ், ரஜினி அரசியல் வருகை குறித்து செய்தியாளர்களிடம் பேசும் போது, ரஜினி கட்சி ஆரம்பித்தால் கூட்டணி குறித்து பேசுவோமா என யோசித்து வருகிறேன்.
மேலும் ரஜினி முதலில் கட்சி தொடங்கட்டும் பிறகு கூட்டணி வைப்பதை பார்க்கலாம் என்றும் தெரிவித்தார். பாமக நிறுவனர் ராமதாஸின் இந்த பேச்சு அரசியல் களத்தில் பரபரப்பாக பார்க்கப்படுகிறது. தற்போது அதிமுக கூட்டணியில் பாமக கட்சி கூட்டணியில் இருப்பது குறிப்படத்தக்கது. அதுமட்டுமில்லாமல் வருகிற சட்ட மன்ற தேர்தலில் பாஜக, ரஜினி, பாமக மற்றும் சில அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து புதிய கூட்டணி உருவாக வாய்ப்பு இருக்கலாம் என்றும் அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. ஏற்கனவே அதிமுகவின் கூட்டணி கட்சிகளான தேமுதிக, பாஜக கட்சிகள் அதிமுக மீதான அதிருப்தியில் இருக்கும் நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் பேச்சால் அதிமுக தலைமை கடும் அதிருப்தியில் இருப்பதாக சொல்கின்றனர்.