அருணாச்சல பிரதேசத்தில் உள்ள தவாங் செக்டார் பகுதியில் கடந்த 9ஆம் தேதி இரவு 50 இந்திய ராணுவ வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் சீன ராணுவத்தைச் சேர்ந்த 200 ராணுவ வீரர்கள் தங்களது எல்லைப் பகுதியை விட்டு இந்திய எல்லைப் பகுதியை நோக்கி மரக்கட்டைகள் மற்றும் ஆணிகள் பொருத்திய ஆயுதங்களுடன் வந்துள்ளனர். இதனைக் கவனித்த இந்திய ராணுவ வீரர்கள் அவர்களைத் தடுக்க முயலும்போது இரு தரப்புக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. அப்போது இந்திய ராணுவ வீரர்கள் 200க்கும் மேற்பட்டவர்கள் சம்பவ இடத்திற்கு வந்ததைக் கவனித்த சீன ராணுவத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இரு தரப்புக்கும் இடையே 30 நிமிடம் சண்டை நீடித்துள்ளது. சம்பவத்திற்குப் பிறகு, ராணுவ உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து, ஜெய்ப்பூரில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை பயணத்தின்போது, "இந்தியாவுக்கு எதிராக சீனா போர் தொடுக்கத் தயாராகி வருகிறது. இதனைத் தடுக்காமல் மத்திய அரசு தூங்குகிறது. நாட்டின் 2000 சதுர அடி பகுதிகளை சீனா ஆக்கிரமித்துள்ளது. 20 வீரர்களைக் கொன்றுள்ளனர். அருணாச்சல பிரதேசத்தில் ராணுவ வீரர்களை அடித்துக் காயப்படுத்தியுள்ளனர்" என்று மத்திய அரசுக்கு எதிராக தனது கருத்துகளைத் தெரிவித்து இருந்தார்.
இதற்குப் பதிலளிக்கும் வகையில் கோவா மாநில முதல்வர் பிரமோத் சாவந்த் ட்விட்டர் பதிவில், "ராகுலுக்கு சீனாவின் மீதான பாசம் மற்றும் மோடிக்கு எதிரான வெறுப்பு உணர்வு எல்லை மீறிச் சென்றுவிட்டது. ராணுவ வீரர்கள் எல்லையை வீரத்துடனும், துணிவுடனும் பாதுகாத்து வருகின்றனர். இந்த செயலுக்காக நமது வீரர்களை இந்திய மக்கள் நேசிப்பதோடு அவர்களுக்கு இதயப்பூர்வமாக ஆதரவு தெரிவிக்கின்றனர்" என்று குறிப்பிட்டுள்ளார்.