விருதுநகர் மாவட்டத்தில், அதிமுக தலைமை, காலை வாரிவிட்ட சிட்டிங் சாத்தூர் எம்.எல்.ஏ. ராஜவர்மனுக்கும், விருதுநகர் மேற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் கோகுலம் தங்கராஜுவுக்கும், உடனடியாக சிவப்புக் கம்பள வரவேற்பு தந்து, அமமுகவில் சேர்த்து, ‘கையில காசு; வாயில தோசை’ என்ற அரசியல் கணக்கில், சாத்தூர் மற்றும் விருதுநகர் தொகுதிகளுக்கு சீட் தந்துவிட்டார், டிடிவி தினகரன்.
அதிமுகவால் சீட் மறுக்கப்பட்ட ஸ்ரீவில்லிபுத்தூர் சிட்டிங் எம்.எல்.ஏ. சந்திரபிரபாவுக்கு மட்டும், அமமுகவில் இணைந்து சீட் வாங்கும் கொடுப்பினை இல்லாமல் போய், எல்லாக் கட்சி வேட்பாளர்களும் வேட்புமனுத் தாக்கல் செய்துவரும் சூழ்நிலையில், வேடிக்கை பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. இதன் பின்னணியில் வில்லங்கமான ஒரு விவகாரம் இருப்பதாகச் சொல்கின்றனர்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்துவந்த ஆதரவை வாபஸ் பெறும் டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் பட்டியலில், முதலில் ஸ்ரீவில்லிபுத்தூர் எம்.எல்.ஏ. சந்திரபிரபாவும் இருந்தார். பிறகு, விருதுநகர் மாவட்ட அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி ‘கூல்’ செய்தவுடன், அங்கிருந்து கழன்றுகொண்டார்.
இந்நிலையில், தினகரன் ஆதரவு நிலைப்பாடு எடுப்பதற்காக ரூ.2 கோடி பெற்றுக்கொண்டு, அந்தத் தொகையை ‘சீட்டிங்’ செய்து, எடப்பாடி பக்கம் போய்விட்டார் என்று அப்போது பரவலான பேச்சு எழுந்தது. இந்த விவகாரத்தில், கொடுத்த தொகையைத் திரும்பக் கேட்டு சந்திரபிரபாவிடம் அடாவடி செய்கிறார் என்று, அப்போது தினகரன் ஆதவாளராக இருந்த முன்னாள் அமைச்சர் ஒருவரின் பெயரும் அடிபட்டது. அந்த நேரத்தில் சந்திரபிரபா தரப்பில் தெளிவாகச் சொன்னார்களாம் – ‘எடப்பாடிக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்தால், நிச்சயமாக எதிர்த்து வாக்களிக்கிறேன். அதற்காகத்தான் ரூ.2 கோடி தந்தீர்கள். நானும், வாங்கிய பணத்துக்கு நேர்மையாக நடந்துகொள்வேன். மற்றபடி, கொடுத்த பணத்தை திரும்பக் கேட்பது முறையல்ல..’ என்று ஆளும்கட்சி பின்னணியில் இருக்கும் தைரியத்தில் ‘கெத்து’ காட்டிவிட்டாராம். இதற்குமேல், அந்த 2 கோடி ரூபாயை சந்திரபிரபாவிடம் கேட்டு, வில்லங்கத்தில் மாட்டிக்கொள்ள விரும்பாத தினகரன் தரப்பு ‘சைலன்ட்’ ஆகிவிட்டது.
தங்களுக்கே ‘தண்ணி’ காட்டிய சந்திரபிரபாவை எப்படி அமமுக சேர்த்துக்கொள்ளும்? சீட் வேறு தரும்? இதனை நன்றாகவே அறிந்திருக்கும் சந்திரபிரபாவும், எந்த முகத்தை வைத்துக்கொண்டு அமமுக-வில் சேரமுடியும்? அதே நேரத்தில், ‘ரூ 2 கோடிக்காக எதிரணியோடு கை கோர்த்தவர் அல்லவா?’ என்று எடப்பாடி தரப்பிலும், சீட் தர மறுத்து, கை கழுவிவிட்டது.
இதுகுறித்து சந்திரபிரபாவின் கருத்தை அறிய தொடர்புகொண்டபோது, அவருடைய லைனில் கணவர் முத்தையா வந்தார். “அமமுக பக்கம் ஒருகாலும் போக மாட்டோம். கட்சித் தலைமை எங்களுக்கு சீட் தராதது குறித்து விமர்சனம் பண்ண விரும்பல. ரூ. 2 கோடி வாங்கினோமா? அப்படி எதுவும் இல்ல. ரோட்ல போறவங்க கூட எதுவும் சொல்லுவாங்க. ஆனா.. உண்மையைச் சொல்லணும்ல. நீங்க சொல்லுற அந்த நேரத்துல, அமமுக பக்கம் (முழுமனதுடன்) சந்திரபிரபா போகவே இல்ல. அவங்க கூப்பிட்டு விட்டிருந்தாங்க. என்னன்னு பார்க்கப் போனோம். அவ்வளவுதான். ஒரே ஒருநாள் தேனிக்குப் போயிருந்தோம். பார்த்துட்டு, அது நமக்குத் தோது வராதுன்னு திரும்பி வந்துட்டோம். அவ்வளவுதான். தலைமைக்கு கட்டுப்பட்டு, இனி கட்சிப் பணியைப் பார்க்க வேண்டியதுதான்.” என்று பட்டும் படாமலும் நடந்ததைக் கூறி, குற்றச்சாட்டை மறுத்தார்.
பணபேர அரசியல் புதிர்களை அவிழ்ப்பதெல்லாம் சாத்தியமா?