தமிழக சட்டமன்றத் தேர்தலுடன், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலும் ஒரே கட்டமாக ஏப்ரல் 6- ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் தொடங்கிய நிலையில், அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளின் தலைவர் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
அதன் தொடர்ச்சியாக, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதிகளில் அ.தி.மு.க. மற்றும் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து நாளை (16/03/2021) அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்கிறார். அதே போல தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், நாளை (16/03/2021) காலை 10.00 மணிக்கு ஆலங்குடி சட்டமன்றத் தொகுதியின் தி.மு.க. வேட்பாளர் மெய்யநாதன் மற்றும் அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ராமச்சந்திரன் ஆகிய இருவருக்கும் கீரமங்கலத்தில் ஒரே இடத்தில் வாக்குச் சேகரித்து பிரச்சாரம் செய்வதாக அறிவிக்கப்பட்டது. அதற்கான ஏற்பாடுகளும் நடந்து முடிக்கப்பட்டு சுமார் 3 கி.மீ. தூரத்திற்குக் கொடிகளும் கட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இன்று (15/03/2021) இரவு 10.00 மணிக்கு திடீரென மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டதாகவும், வரும் மார்ச் 18- ஆம் தேதி அன்று அவர் பிரச்சாரம் மேற்கொள்ளவிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதே வழித்தடத்தில் அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி வாக்குச் சேகரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.