நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே, தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் தேனி பெரியகுளம் அருகே லட்சுமிபுரத்தில் இன்று (10.04.2024) மாலை நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் தேனி மற்றும் திண்டுக்கல் நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொள்கிறார். தேனி நாடாளுமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனும், திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தமும் போட்டியிடுகின்றனர்.
இத்தகைய சூழலில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று காலை தேனியில் நடைப் பயிற்சி மேற்கொண்டார். அப்போது அங்குள்ள உழவர் சந்தை பகுதியில் நடந்து சென்று வியாபாரிகளையும், வணிகர்களையும், பொதுமக்களையும் சந்தித்து தேனி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனை ஆதரித்து வாக்கு சேகரித்தார். மேலும் பொதுமக்களின் குறைகளையும் கேட்டறிந்தார். அப்போது அவருடன் பொதுமக்கள் ஆர்வத்துடன் செல்பி எடுத்துக்கொண்டனர். அமைச்சர் ஐ.பெரியசாமி, திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் மற்றும் திமுக நிர்வாகிகள் எனப் பலரும் உடன் இருந்தனர்.