திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி சட்டமன்றத் தொகுதியில், அமமுக சார்பில் போட்டியிடும் எஸ்.காமராஜ், திருவாருர் தொகுதியில் போட்டியிடும் எஸ்.டி.பி.ஐ. கட்சி வேட்பாளர் நசிமாபானு, நன்னிலம் தொகுதியில் போட்டியிடும் ராஜேந்திரன் மற்றும் திருத்துறைப்பூண்டி மக்கள் அரசு கட்சி வேட்பாளர் ரஜினிகாந்த் ஆகியோரை ஆதரித்து பெரியார் சிலை முன்பு டி.டி.வி தினகரன் தேர்தல் பரப்புரை மேற்கொள்வார் என பொதுமக்களை திரட்டியிருந்தனர் அக்கட்சியினர். மன்னார்குடியில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் காலம் கடந்து வந்து பொதுமக்களிடம் பேசாமல் சென்றதால் பொதுமக்கள், தொண்டர்கள் என அனைவரும் ஏமாற்றம் அடைந்தனர். அப்போது, அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ். காமராஜ் நெஞ்சுவலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு பலமான கட்சிகளான திமுக, அதிமுகவினர் கூட்டும் கூட்டத்தைத்தாண்டி மக்களைத் திரட்டி அதிரவிட்டிருந்தனர் அமமுகவினர். திருவாரூர் மாவட்டம் முழுவதுமே அமமுக மா.செவான எஸ்.காமராஜிக்கு ஆதரவாளர்கள் அதிகம். அவர்கள் அனைவருமே மாஸ் காட்டுவதற்காக மன்னார்குடியை திரட்டி அதிமுக, திமுக வேட்பாளர்களை மிரளவிட்டிருந்தனர். இந்நிலையில், மாலை 6 மணிமுதல் காத்திருந்த பொதுமக்களுக்கு இளைப்பாறும் விதமாக ஆடல்பாடல் நிகழ்ச்சிகள், ஆடல்பாடல் நிகழ்ச்சிகளுக்கு இடையே மக்கள் தலைவர் டிடிவி ‘இதோ வந்துவிட்டார், அதோ வந்துவிட்டார், பத்து நிமிடத்தில் வந்துவிடுவார்’ என பாடலுக்கு இடையிடையே விளம்பரம் செய்துகொண்டிருந்தனர்.
அதே நேரம், மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகளுக்குப் பிரச்சாரம் செய்யச் சென்ற டி.டி.வி. தினகரன், குறிப்பிட்ட நேரத்திற்கு வராததால் கூடியிருந்த தொண்டர்களும், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து கொஞ்சம் கொஞ்சமாகக் கலைந்து செல்ல ஆரம்பித்துவிட்டனர். இதற்கிடையில், இரவு 10.12 மணிக்கு மேல் பிரச்சார மேடைக்கு வந்தார் டிடிவி. தினகரன். தேர்தல் பரப்புரை நேரம் முடிந்துவிட்டதால், பொதுமக்களிடமும், தொண்டர்களிடமும் பேசமுடியாமல் போனதால், கை அசைத்துவிட்டு சென்றுவிட்டார். இதனால் அமமுகவின், கூட்டணிக் கட்சி நிர்வாகிகளிடையே சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டதோடு, தனது சொந்த ஊரிலேயே பேச முடியாமல் போய்விட்டாரே என்கிற வருத்தம் அமமுகவினர் மத்தியில் ஏற்பட்டது.
இந்தச் சூழலில் அமமுக மா. செவான எஸ். காமராஜிக்கு திடிரென நெஞ்சுவலி ஏற்பட்டு தஞ்சை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இதுகுறித்து எஸ்.காமராஜிக்கு நெருக்கமானவர்களிடம் விசாரித்தோம், “திருவாரூர் மாவட்டத்தில் ஆளும் கட்சி அமைச்சரான ஆர்.காமராஜிக்கு நிகரான ஆதரவாளர்களை வைத்திருப்பவர் அமமுக மாவட்டச் செயலாளர் எஸ். காமராஜ். இருவருக்குமே சொந்த ஊர் மன்னார்குடி என்றாலும் எஸ். காமராஜ் மீது உள்ள அச்சத்தால், மன்னார்குடியில் போட்டியிடாமல் நன்னிலத்தை தேர்வு செய்தார் அமைச்சர் காமராஜ். அந்தளவிற்கு செல்வாக்கு உள்ளவருக்கு இப்படிச் சங்கடமான சூழல்வரும்போது மனம் வேதனைபடத்தானே செய்யும், அவருக்கு உண்டான மன அழுத்தம் நெஞ்சுவலியாக மாறிடுச்சி, தற்போது டி.டி.வி. தினகரனுக்கு பிரதான தளபதிகளாக இருப்பவர்களில் காமராஜும் ஒருவர். அவருக்கு இப்படி நடந்தது டி.டி.வி’யை சங்கடப்படவைத்துள்ளது” என்கிறார்கள்.