ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிடுகிறார் மாதவராவ். இவருடைய மகள் திவ்யா, டம்மி வேட்பாளராக, இதே தொதியில் வேட்பு மனு தாக்கல் செய்திருக்கிறார். தேர்தல் களத்தில் மிகத் தீவிரமாக, தன் தந்தைக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் திவ்யா. தேர்தல் அலைச்சலின் காரணமாக, 63 வயதான மாதவராவ் உடல் சோர்வுற்றிருந்த நிலையில், அவரது மகள் திவ்யா காங்கிரஸ் வேட்பாளராக மாற்றப்படுவார் எனத் தகவல் பரவியது.
காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் தரப்பை தொடர்புகொண்டோம். “திவ்யா டம்மி வேட்பாளர்தான். தனது வேட்புமனுவை அவர் வாபஸ் பெற்றுக்கொண்டார். தேர்தல் களம் மிகத் தெளிவாக இருக்கிறது. இந்தத் தொகுதியில் யாருக்கு வெற்றி என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. காங்கிரஸ் வேட்பாளருக்கு சாதகமாக உள்ள வாக்குகளைச் சிதறடிப்பதற்காகவே, வேட்பாளர் மாற்றம் என்று எதிரணியினர் வதந்தி பரப்புகிறார்கள்.” என்றார்கள் வேதனையோடு.