Skip to main content

“நல்லாட்சிக்குக் கிடைத்த நற்சான்றிதழ்” - முதல்வர் மு.க.ஸ்டாலின்!

Published on 14/07/2024 | Edited on 14/07/2024
Certificate for good governance Chief Minister MK Stalin

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா, பாஜக கூட்டணியில் உள்ள பாமக சார்பில் அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் சி.அன்புமணி ஆகியோர் போட்டியிட்டனர். இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று (13.07.2024) எண்ணப்பட்டன. இதனையடுத்து 20 சுற்றுகள் முடிவில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 1 லட்சத்து 24 ஆயிரத்து 53 வாக்குகள் பெற்று 67 ஆயிரத்து 757 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாகத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இந்நிலையில் விக்கரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்றது தொடர்பாக தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், “விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் களத்தில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா மகத்தான வெற்றி பெற்றிருக்கிறார். திமுக வேட்பாளருக்கு மக்கள் அளித்த வாக்குகள் 1,24,053. தனக்கு அடுத்தபடியாக வந்த பா.ம.க வேட்பாளரை  67,757 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார். போட்டியிட்ட மற்ற வேட்பாளர்கள் கட்டுத்தொகையை இழந்திருக்கிறார்கள். 

Certificate for good governance Chief Minister MK Stalin

திராவிட மாடல் அரசு மக்களுக்கான அரசாக இருக்கிறது. தமிழ்நாட்டு மக்கள் திமுக மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்பதைத்தான் இந்த இடைத்தேர்தல் வெற்றி எடுத்துக்காட்டுகிறது. மூன்றாண்டுகால நல்லாட்சிக்குக் கிடைத்த நற்சான்றிதழ்தான் இந்த மகத்தான வெற்றி. அதனை வழங்கிய விக்கிரவாண்டி தொகுதி வாக்காளர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை திமுக தலைவர் என்ற முறையிலும், தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற முறையிலும் உங்களில் ஒருவனான நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் களத்தில் போட்டியிடாமல் அதிமுக ஒதுங்கி நின்று, தனது கள்ளக்கூட்டணிக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தது. திமுக வெளிப்படையான ஜனநாயக நெறிமுறைப்படி களம் கண்டது. விக்கிரவாண்டியில் உள்ள 2 இலட்சத்து 34ஆயிரத்து 653 வாக்காளர்களையும் திமுக நிர்வாகிகள் வீடு வீடாகச் சென்று நேரில் சந்தித்து, மூன்றாண்டுகால திராவிட மாடல் அரசின் சாதனைகளை எடுத்துச் சொல்லி, அந்தத் திட்டங்களின் பயன்களை நேரடியாகப் பெற்றுள்ள மக்களிடம் உதயசூரியனுக்கு வாக்களிக்கக் கேட்டுக் கொண்டார்கள். திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி தமது பரப்புரையில், விக்கிரவாண்டி தொகுதியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள், நிறைவேற்றப்படவிருக்கிற திட்டங்களைப் பட்டியலிட்டு வாக்கு சேகரித்தார். 

Certificate for good governance Chief Minister MK Stalin

திட்டங்களின் பயன்கள் எல்லாருக்கும் கிடைத்திடுவதை உறுதி செய்து, பாகுபாடின்றி அதனைச் செயல்படுத்தி வருகிறோம். இதே விக்கிரவாண்டி தொகுதியில் உள்ள வாக்காளர்களிடம் எடுக்கப்பட்ட ஒரு காணொலியைப் பார்க்கும் வாய்ப்பு அமைந்தது. அதில் மாற்றுக் கட்சியைச் சேர்ந்த ஒரு பெண்மணி, தன்னுடைய கட்சிக்குத்தான் ஓட்டுப் போடுவேன் என்று சொன்னபோதும், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின்கீழ் மாதம் 1000 ரூபாய் தனக்கு வந்து கொண்டிருக்கிறது என்பதை வெளிப்படையாகவே ஒப்புக்கொண்டார். இதுதான் திராவிட மாடல் அரசு. ஒருவர் எந்தக் கட்சிக்காரர் என்று பார்ப்பதில்லை. தமிழ்நாட்டு வாக்காளரான அவர், திட்டத்தில் பயன் பெறத் தகுதியுடையவரா என்பதை மட்டும் பார்த்து, அதன் பயனைக் கிடைக்கச் செய்கின்ற அரசுதான் உங்களில் ஒருவனான என் தலைமையிலான திமுக அரசு.

மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள், பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்கள், பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள், சிறுபான்மைச் சமுதாயத்தினர் வசிக்கின்ற விக்கிரவாண்டி தொகுதியில் சமூகநீதிக் கொள்கை வழியாக அந்தந்தச் சமுதாயங்கள் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் முன்னேற்றம் காண வழிவகுத்தவர் கலைஞர் என்பதைத் தொகுதிவாசிகள் மறந்துவிடவில்லை. மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயம் என்கிற பிரிவை இந்தியாவிலேயே முதன்முறையாக உருவாக்கி, அவர்களுக்கு 20% இடஒதுக்கீடு வழங்கிய தலைவர் கலைஞரின் சமூகநீதிக் கொள்கையால் தலைமுறைகள் கடந்து அடைந்துள்ள முன்னேற்றத்தை அவர்கள் மறக்கவில்லை என்பதைத்தான் விக்கிரவாண்டி மக்கள் தந்துள்ள மகத்தான வெற்றி எடுத்துக் காட்டுகிறது. 

Certificate for good governance Chief Minister MK Stalin

பட்டியல் இனச் சமுதாயத்திற்கு 18% இடஒதுக்கீடு வழங்கியதுடன், அவர்களின் வளர்ச்சிக்காகப் பல திட்டங்களை வழங்கிய கலைஞரின் வழியில், கடந்த மூன்றாண்டு கால திராவிட மாடல் ஆட்சியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, வளர்ச்சிப் பாதையில் அவர்களை அழைத்துச் செல்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

சார்ந்த செய்திகள்