சென்னையில் கிரிக்கெட் போட்டி நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் கிரிக்கெட் சூதாட்டத்தின் தலைநகர்களாக சென்னையும், பெங்களூருவும் இருப்பதாக இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் சௌரவ் கங்குலிக்குப் புகார்கள் போயிருப்பதாக சொல்கின்றனர். தமிழ்நாடு பிரிமியர் லீக்கிலும், கர்நாடக பிரிமியர் லீக்கிலும் கிரிக்கெட் சூதாட்டம் நடப்பதாக தொடர் புகார்கள் எழுந்ததால், அது குறித்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழக பிரிமியர் லீக்கில் விளையாடும் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் டீமை மையமாக வைத்து ஏறத்தாழ 250 கோடி ரூபாய் அளவுக்கு பெட்டிங் நடந்ததாக கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக சொல்கின்றனர். இந்த அணியின் உரிமையாளரான செல்வகுமார், சசிகலாவின் பினாமி என்றும் சொல்லப்படுகிறது.
மேலும் தமிழ்நாடு பிரிமியர் லீக் தொடர்பான சூதாட்டக் குற்றங்களுக்கு காரண கர்த்தாக்கள் என்று இப்போது, ’இந்தியா சிமெண்ட்ஸ்’ சீனிவாசனையும், தமிழ்நாடு கிரிக்கெட் வாரிய நிர்வாகி பழனியையும் அகில இந்திய கிரிக்கெட் வாரியம் கார்னர் பண்ணுவதாக கூறுகின்றனர். தமிழ்நாடு கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருப்பது இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசனின் மகள் ரூபாதான். அவரையும் பழனியையும் நோக்கி விசாரணைப் படைகள் நெருங்கி வருவதாக சொல்லப்படுகிறது. அதேபோல் தமிழ்நாடு பிரிமியர் லீக்கை தடை செய்யவும் ஒரு முயற்சி நடந்து வருகிறது.