மகாராஷ்டிரா மாநிலத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகியவை இணைந்து கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. இந்தக் கூட்டணி ஆட்சியில் உத்தவ் தாக்கரே முதலமைச்சராக இருந்து வந்தார். இந்நிலையில், சிவசேனாவில் ஏற்பட்ட உட்கட்சி பிரச்சனையால் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான 40க்கும் மேற்பட்ட சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் அணி திரண்டு உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக செயல்பட்டனர்.
இதையடுத்து, சிறப்பு சட்டப்பேரவையைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தவ் தாக்கரேவுக்கு அம்மாநில ஆளுநர் உத்தரவிட்டிருந்தார். பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலையில் அதற்கு முன்னதாகவே தனது முதலமைச்சர் பதவியை உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்தார். இதையடுத்து, பா.ஜ.க.வின் ஆதரவுடன் மகாராஷ்டிரா மாநில முதலமைச்சராக ஏக்நாத் ஷிண்டே பதவியேற்றுக் கொண்டார். துணை முதல்வராக பாஜகவைச் சேர்ந்த தேவிந்திர ஃபட்னாவிஸ் பதவியேற்றுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து சிவசேனா கட்சியும், சின்னமும் ஏக்நாத் ஷிண்டே வசமானது. இதனையடுத்து உத்தவ் பாலாசாகேப் சிவசேனா கட்சி என்ற புதிய கட்சியை தொடங்கி பாஜகவிற்கு எதிராக விமர்சனங்களை முன் வைத்து வருகிறார்.
இந்நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எதிர்க்கட்சித் தலைவரும், சர்த் பவாரின் மகனுமான அஜித் பவார் அக்கட்சியில் இருந்து விலகி பாஜக கூட்டணியில் இணைந்துள்ளார். தற்போது அவர் மகாராஷ்டிரா மாநிலத்தின் துணை முதல்வராகவும் பதவியேற்றுக்கொண்டுள்ளார். அவருடன் 8 தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர். பாஜக கூட்டணியில் இணைந்த அஜித் பவார் உள்பட 9 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் கட்சித்தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்நிலையில், திருச்சியில் இன்று நடந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழுக் கூட்டத்தில் அக்கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கலந்துகொண்டார். பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “மகாராஷ்டிராவில் சரத்பவார் கட்சி உடைந்ததற்கு அமலாக்கத்துறை தான் காரணம். அமலாக்கத்துறை அங்கு அவர்கள் பணியை சிறப்பாக செய்து அதில் வெற்றி பெற்றுள்ளார்கள். பா.ஜ.க.வின் கைத்தடியாக அமலாக்கத்துறை செயல்படுகிறது. நாடு முழுவதும் உள்ள கட்சிகளை உடைக்கும் வேலைகளை அமலாக்கத்துறை செய்வார்கள். தமிழ்நாட்டிலும் அதற்கான முயற்சியில் அவர்கள் இறங்கி விட்டார்கள்.
மேகத்தாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசு மக்களிடையே குழப்பம் ஏற்படுத்த வேண்டாம். மேகதாது அணை கட்டுவோம் என்கிற திட்டம் அவர்களிடம் இருந்தால் அதை அவர்கள் கைவிட வேண்டும்” என்று தெரிவித்தார்.