
காவிரி மேலாண்மை ஆணையத்தை, மத்திய ஜல்சக்தி துறையின் கீழ் மத்திய அரசு இணைப்பதை கண்டித்து தமிழ்நாடு முழுக்க எதிர்ப்பு உருவாகியுள்ளது. காவிரி டெல்டா மாவட்டங்களில் வயல்களில் கறுப்புக்கொடி, அரசிதழின் நகல் கிழிப்பு என போராட்டம் பரவி வருகிறது. ஊரடங்கை மீறி புறப்படும் எதிர்ப்புகள் மத்திய, மாநில அரசுகளை கலக்கமடைய வைத்துள்ளன.
இதனிடையே நாளை (மே 7 ) மாலை 5 மணிக்கு மத்திய அரசுக்கு எதிராக பதாகை, கறுப்புக்கொடி ஏந்தி அவரவர் வீட்டு வாசலில் 10 நிமிடங்கள் நின்று எதிர்ப்பை தெரிவித்து, அதை சமூக இணைய தளங்களில் பதிவிட வேண்டும் என பெ.மணியரசன் தலைமையிலான காவிரி உரிமை மீட்புக் குழு வேண்டுகோள் விடுத்தது.
இதற்கு சீமான், மு.தமிமுன் அன்சாரி, வேல்முருகன், தனியரசு, கருணாஸ், இயக்குனர் கெளதமன், இயக்குனர் களஞ்சியம், சுப.உதயக்குமார், பேரா. ஜெயராமன், கி.வெங்கட்ராமன், காவிரி தனபாலன் மற்றும் விவசாய அமைப்புகள், சுற்றுச்சூழல் அமைப்புகள், மனித உரிமை அமைப்புகள் ஆதரவு கொடுத்துள்ளன.
திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், கரூர் மாவட்டங்களில் நாளை கிராமங்கள், நகரங்கள் என இரண்டிலிருக்கும் பொதுமக்களும் போராட்டத்தில் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.