தேர்தல்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீத இட ஒதுக்கீடு கோரிய விண்ணப்பத்தை பரிசீலிக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாடாளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சி அமைப்புகள் என அனைத்துத் தேர்தல்களிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதை உறுதி செய்யக் கோரி ரமேஷ் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
பெண்கள், பட்டியலினத்தவர், பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு இருப்பது போல, மாற்றுத் திறனாளிகளுக்கும் வழங்க வேண்டுமென மனுவில் கோரிக்கை வைத்திருந்தார். இதுதொடர்பாக, 2016-ஆம் ஆண்டு நவம்பர் 29-ஆம் தேதியும், 2017-ஆம் ஆண்டு பிப்ரவரி 28-ஆம் தேதியும், பல்வேறு துறைகளுக்கு மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வு, மனுதாரரின் கோரிக்கை மனுவைப் பரிசீலித்து, தகுந்த உத்தரவு பிறப்பிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.