அதிமுகவில் ஒற்றைத் தலைமை தொடர்பான விவகாரங்கள் விவாதமாகி அதிமுக தற்பொழுது எடப்பாடி அணி, ஓபிஎஸ் அணி என இரண்டாகப் பிரிந்து கிடக்கிறது. பொதுக்குழு தொடர்பான வழக்கில் அண்மையில் உச்சநீதிமன்றம் பொதுக்குழு செல்லும் எனவும், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து தாங்கள் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை எனவும் தீர்ப்பளித்திருந்தது. இதனால் எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கியது. அதே நேரத்தில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் வெற்றிகரமாக அமையாத நிலையும் தற்போது உள்ளது.
இந்நிலையில் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும் என ஓபிஎஸ் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. எம்எல்ஏவும் வழக்கறிஞருமான மனோஜ் பாண்டியன் உரிமையியல் வழக்கை தாக்கல் செய்துள்ளார்.
கடந்த 23 ஆம் தேதி உச்சநீதிமன்றம் தன்னுடைய தீர்ப்பில் ஜூலை 11ஆம் தேதி நடத்தப்பட்ட பொதுக்குழு செல்லும், அதே சமயம் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து தாங்கள் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. சம்பந்தப்பட்ட உரிமையியல் நீதிமன்றம் தான் முடிவெடுக்க வேண்டும் எனத் தெரிவித்தனர். இதன் அடிப்படையில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை இணைத்து உயர்நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்காக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஓபிஎஸ், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோரை அதிமுகவிலிருந்து நீக்கிய தீர்மானத்தையும், இடைக்கால பொதுச்செயலாளராக இபிஎஸ்ஸை நியமித்ததையும் தற்காலிகமாக தடை விதிக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு முன்பு தற்பொழுது விசாரணை தொடங்கிய நிலையில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் கலைக்கப்பட்டுள்ளது. பொதுச்செயலாளர் பதவி மீண்டும் கொண்டுவரப்பட்டு அதில் போட்டியிட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. விளக்கமளிக்க எங்களுக்கு வாய்ப்பளிக்காமல் கட்சியிலிருந்து எங்களை நீக்கி தீர்மானம் நிறைவேற்றியது சட்டவிரோதம். தீர்மானத்தின் அடிப்படையில் ஈபிஎஸ் தரப்பு செயல்பட தடை விதிக்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பு தற்போது வாதத்தை முன் வைத்துள்ளது.