தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று (29.01.2021) மாலை 4.30 மணிக்கு கூடுகிறது. இதுதான் அதிமுக அரசின் இந்த ஆட்சிக்காலத்திற்கான இறுதி அமைச்சரவைக் கூட்டமாகவும் இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. காரணம் இன்னும் சில மாதங்களில் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவிருப்பதால், இந்த ஆட்சிக்காலத்தின் இறுதி அமைச்சரவைக் கூட்டமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தமிழக சட்டமன்றத்திற்கு இந்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் தேர்தல் நடக்கவிருப்பதால், பிப்ரவரி மாதம் இடைக்கால பட்ஜட்தான் தாக்கல் செய்யமுடியும். பட்ஜெட் தாக்கலுக்கு முன்னதாக சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும். அதற்காக இந்த மாதம் முதலிலேயே ஆளுநருக்கு தலைமைச் செயலகம் தரப்பில் இருந்து ஒப்புதல் கேட்டும், நீண்டகாலம் கடத்தியே ஒப்புதல் வந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, வரும் பிப். 2ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை கூடுகிறது. இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டம் என்பதால் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தொடங்கப்படும்.
இதற்கு முன்னதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று மாலை 4.30 மணிக்கு சென்னை, தலைமைச் செயலகத்தில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில், வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படும் புதிய சட்ட மசோதாக்கள் குறித்தும், தொழில் நிறுவனங்களுடன் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்கு அனுமதி அளிப்பது குறித்தும் விவாதிக்கப்பட உள்ளதாக தெரிகிறது.
இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டு ஒப்புதல் பெறப்படும். இதேபோல், பிப்ரவரி மாத இறுதியில் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் நடத்தவும் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவருவதால், இடைக்கால பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் அறிவிக்கப்படவும் வாய்ப்பு அதிகளவில் உள்ளது. அதனால், தமிழக மக்களுக்கு என்னென்ன புதிய அறிவிப்புகள் வெளியிடலாம் என்பது குறித்தும் இன்று நடைபெற உள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படவும் வாய்ப்புகள் உள்ளது.