சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் புதிய கட்டடங்கள் திறப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “ஆளுநர் சட்ட மசோதா குறித்து பேசியதற்கு முதலமைச்சர் தெளிவான விளக்கம் கொடுத்துவிட்டார். ஆளுநரின் செயல் கண்டனத்திற்கு உரியது. இதுமட்டுமில்லாமல் ஆன்லைன் சூதாட்டத்தால் இதுவரை 42க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நாங்கள் மக்கள் பிரதிநிதிகள். திமுக, அதிமுக என எதுவாக இருந்தாலும் சட்டமன்றத்தில் தீர்மானமாக நிறைவேற்றி அனுப்பி வைக்கிறோம். இது மாநில சுயாட்சிக்கு அளிக்கப்பட்டுள்ள பெரிய இழுக்கு. முதலமைச்சர் அடுத்தகட்ட நடவடிக்கையை விரைவில் எடுப்பார்.
வெளிநாட்டில் இருந்து நிதிகளைப் பெற்றுக்கொண்டு ஸ்டெர்லைட் போராட்டத்தில் மக்களைத் தூண்டிவிட்டுள்ளதாகப் பேசியுள்ளார். தூத்துக்குடி போய் அவர் இதுபோல் பேச முடியுமா? ஆளுநர் மாளிகையில் உட்கார்ந்து கொண்டு பேசுகிறார். பொதுக்கூட்டத்திலோ, மாநாட்டிலோ, தூத்துக்குடியிலோ போய் பேச முடியுமா? நான் சவால் விடுக்கிறேன். நூறு நாட்கள் நடந்த மிகப்பெரிய போராட்டம். 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்கள். இது அதிமுக எதிர்க்கட்சித் தலைவர் சொன்னது போல் தான். இதை அவர் டிவியில் பார்த்து தெரிந்து கொண்டதாகச் சொன்னார். இதற்கும் அதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை. இதை கண்டிக்கிறோம்” எனக் கூறினார்.