எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடத்தப்பட்ட பொதுக்குழு செல்லாது என ஓபிஎஸ் தரப்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் நேற்று 11.30 மணிக்கு வெளியிட்ட தீர்ப்பில், 'அதிமுகவில் ஜூன் 23ஆம் தேதி இருந்த நிலையே நீடிக்கும். எனவே ஓபிஎஸ், இபிஎஸ் இணைந்து பொதுக்குழுக் கூட்டம் நடத்தவேண்டும். தனிக் கூட்டம் கூடக்கூடாது. பொதுக்குழுவை கூட்ட ஆணையரை நியமிக்க வேண்டும். இபிஎஸ்-ஐ பொதுச்செயலாளராக தேர்வு செய்தது செல்லாது. பொதுக்குழுவைக் கூட்டுவதற்கு 30 நாட்களுக்கு முன் நோட்டீஸ் அனுப்ப வேண்டும். ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லாது' என உத்தரவு பிறப்பித்திருந்தார்.
நேற்றே செய்தியாளர்களைச் சந்தித்த ஓபிஎஸ், ''அவர்கள் தரப்பு, எங்கள் தரப்பு என்றில்லை தேவைப்பட்டால் கலந்துபேசி முடிவெடுப்போம். அனைவரும் ஒன்றுபட வேண்டும். நீக்கப்பட்ட அனைவரும் சேர்க்கப்பட வேண்டும்'' என்று கூறியிருந்தார். இந்நிலையில் இன்று சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள இல்லத்தில் தனது ஆதரவாளர்களுடன் செய்தியாளர்களைச் சந்தித்த ஓபிஎஸ், ''எம்ஜிஆர் துவங்கிய அதிமுகவை யாராலும் அழிக்கமுடியாத இயக்கமாக ஜெயலலிதா உருவாக்கினார். 30 ஆண்டுகள் அதிமுகவை கட்டிக்காத்து பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை தீட்டியவர் ஜெயலலிதா. நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். இனி நடக்கப்போவது நல்லதாக இருக்கட்டும். மீண்டும் ஒன்றுபட்டு ஆட்சியைப் பிடிப்பதே நோக்கமாக இருக்கட்டும். சகோதரர் எடப்பாடியும், நானும் ஒன்று சேர்ந்து சிறப்பான பணிகளைச் செய்தோம். எங்களுக்குள் வந்த சில கருத்து வேறுபாடுகளால் அதிமுகவிற்கு அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. கூட்டுத்தலைமையாக செயல்படுவோம். கசப்புகளை மனதில் வைக்காமல் தூக்கி எறிந்துவிட்டு அதிமுகவின் வெற்றியே பிரதானம் என்று செயல்படலாம்'' என எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுத்தார் ஓபிஎஸ்.