2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ந் தேதிக்கு முன்பு, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு இடம்பெயர்ந்த இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்கும் வகையிலான குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா டிசம்பர் 9 ஆம் தேதி தாக்கல் செய்தார். நீண்ட விவாதத்திற்கு பிறகு மக்களவையில் இந்த சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து டிசம்பர் 11 அன்று மாநிலங்களவையில் இந்த மசோதாவை அமித்ஷா அறிமுகம் செய்தார். மக்களவையை போலவே மாநிலங்களவையில் இந்த மசோதா மீது காரசார விவாதங்கள் நடைபெற்றன. இறுதியில் மசோதா மீதான வாக்கெடுப்பின் போது, மசோதாவுக்கு ஆதரவாக 125 வாக்குகளும், எதிராக 105 வாக்குகளும் கிடைத்தன. இரு அவைகளிலும் மசோதா வெற்றிபெற்ற நிலையில், நேற்று நள்ளிரவு இந்த சட்ட திருத்தத்திற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் வழங்கியுள்ளார்.
இந்த நிலையில் மாநிலங்களவையில் வாக்கெடுப்பின்போது, அவையில் 230 உறுப்பினர்கள் இருந்தனர். மத்திய அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்த குடியுரிமை மசோதா வெற்றி பெறுவதற்கு 116 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற நிலை இருந்தது. இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 105 எம்.பி.க்களின் பலம் இருந்தது. மசோதாவை நிறைவேற்ற 116 எம்.பி.க்களின் ஆதரவு வேண்டும் என்ற நிலையில் அதிமுக 11, பிஜு ஜனதா தளம் 7, ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் 2, தெலுங்கு தேசத்துக்கு 2 உறுப்பினர்கள் குடியுரிமை திருத்த மசோதாவுக்கு ஆதரவு அளித்தன. இதில் அதிமுக கட்சியின் ஆதரவு மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் அதிமுக கட்சி ஆதரவு கொடுக்காமல் இருந்து இருந்தால் 115 எம்.பி.க்களின் ஆதரவு மட்டுமே இருந்து இருக்கும். மசோதாவிற்கு எதிராக 116 எம்.பி.க்களின் எண்ணிக்கை இருந்து இருக்கும். தற்போது அதிமுக ஆதரவு கொடுத்துள்ளதால் மாநிலங்களவையில் இந்த மசோதா நிறைவேற்றுபட்டுள்ளது. மேலும் சிவசேனா கட்சியின் 3 எம்.பி.க்களும் மசோதாவின் மீதான வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் வெளியேறியது குறிப்படத்தக்கது.