தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் குறித்து ஊடகங்களின் கருத்துக் கணிப்புகளும், புலனாய்வு அமைப்புகளின் கணிப்புகளும் திமுக தலைமையிலான கூட்டணிக்கே சாதகமாக இருக்கிறது. இந்நிலையில், அண்ணா அறிவாலயத்தில் உள்ளவர்கள் ஆட்சி அமைப்பதற்கான சூழலுக்கு வந்துவிட்டனர். இதில் திமுக வேட்பாளர்கள் பலர் ஆட்சி அமையும்போது அமைச்சர் பதவி பெற்றுவிட வேண்டும் என்று நினைக்கின்றனர். அதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளனர்.
கடந்தமுறை திமுக ஆட்சிக் காலத்தில் அமைச்சர்களாக இருந்த சீனியர்களுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் என்றும், அவர்களுக்கான துறைகள் மாற்றப்படும் என்றும், தற்போது புதிய முகங்களுக்கும் வாய்ப்புகள் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. அதேபோல் அதிமுகவில் இருந்து வந்தவர்கள், தான் போட்டியிட்ட தொகுதி மட்டுமல்லாமல், மற்ற தொகுதிகளிலும் திமுக வெற்றிபெற உறுதுணையாக இருந்தவர்களுக்கும் அமைச்சரவையில் வாய்ப்பு கிடைக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேபோல் கோட்டையில் உள்ள அதிகாரிகள் சிலர், தற்போது திமுக முக்கிய தலைவர்களிடம் பேச தொடங்கியுள்ளனர். கடந்த பத்து வருடங்களாக திமுகவுக்கு வேண்டப்பட்டவர்கள் என ஒதுக்கி வைக்கப்பட்டவர்களெல்லாம், தற்போது அறிவாலயத்தின் தொடர்பில் உள்ளார்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.