தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக்கும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் அறிவிப்பு பல தரப்பினரிடமும் வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், இதற்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.

காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோகார்பன் எடுக்க அதிமுக அரசு அனுமதி தராது. தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படுகிறது என சமீபத்தில் சேலத்தில் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அவரின் இந்த அறிவிப்புக்கு பொதுமக்கள் மத்தியில் பெரிய ஆதரவு கிடைத்தது. இந்த நிலையில், சென்னை தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் இன்று நடைபெற்ற தமிழக அமைச்சரவை கூட்டதில், காவிரி டெல்டா - பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அறிவிப்புக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அனைத்துத் துறை அமைச்சர்களும் பங்கேற்றனர்.