ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈ.வெ.ரா சமீபத்தில் மாரடைப்பால் மரணமடைந்தார். அதன் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆளுங்கட்சியான திமுக அதன் கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு இத்தொகுதியை மீண்டும் ஒதுக்கி உள்ளது. காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், திமுக தேர்தல் பணியைத் தொடங்கிவிட்டது.
அந்தத் தொகுதியில் அதிமுக நேரடியாகப் போட்டியிட உள்ளதாக இ.பி.எஸ் அணி தெரிவித்திருந்தது. அதே சமயம், ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக சார்பில் நாங்களும் போட்டியிடுவோம் என ஓ.பி.எஸ்-ம் தெரிவித்திருக்கிறார்.
இடைத்தேர்தலில் ஆதரவு கோரி பாஜகவின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலையை எடப்பாடி பழனிசாமி சார்பில் அதிமுகவின் மூத்த தலைவர்கள் சந்தித்த நிலையில், தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்திற்கு நேரில் சென்ற ஓ.பன்னீர்செல்வம் பாஜக தலைவர் அண்ணாமலையுடன் ஆலோசித்து வருகின்றார். இந்த சந்திப்பிற்கு வைத்தியலிங்கம், மனோஜ்பாண்டியன் உள்ளிட்டோர் உடன் சென்றுள்ளனர். இபிஎஸ் தரப்பு பாஜகவிடம் ஆதரவைக் கோரியிருக்கும் நிலையில், ஓபிஎஸ்-ம் ஆதரவு கோரியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.