டிடிவி தினகரன் குறித்து தங்க தமிழ்செல்வன் பேசுவது காலம் கடந்து ஞானம் பெற்றதைபோல வியப்பாகவும், வேடிக்கையாகவும் உள்ளது என அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மா நாளிதழில் கூறப்பட்டுள்ளது.
அதில், உடனிருப்பவர்களுக்கு தானே தினகரனின் உண்மை சொரூபம் புரியும். 90களிலேயே அதிமுக ஆட்சியின் அதிகாரங்களை ஒட்டுண்ணி போல உறிஞ்சி கொழுத்து லண்டனிலே ஆயிரம் கோடிக்கு ஓட்டல் வாங்கி விட்டு அதற்காக அப்போதைய திமுக ஆட்சி வழக்கு தொடுத்து விசாரணை அதிகாரி நல்லம நாயுடுவை லண்டனுக்கே அனுப்பி மொத்த விபரங்களையும் திரட்டி வந்தது.
ஆனால் திமுகவோடு திரைறைவு பேரம் நடத்தி தன் மீதான வழக்கை திரும்ப பெற வைத்துவிட்டு ஆனாலும் திருந்தாமல் அன்னிய செலாவணி மோசடிகளை அன்றாட நடவடிக்கைகளாக்கி கொண்டவர் ஃபெரா வழக்குகளுக்கு தேடப்படும் குற்றவாளி ஆனார் தினகரன்.
அவரது தம்பி சுதாகரனின் திருமணத்தில் கூட கலந்து கொள்ள முடியாத அளவுக்கு அமலாக்கப்பிரிவுக்கு பயந்து ஆந்திரா பக்கமாக ஒளிந்து திரிந்தவர், பிறகு ஒரு நாள் நான் இந்திய குடிமகனே அல்ல, இந்தியாவின் நிதி ஒழுக்க சட்டங்கள் எனக்கு பொருந்தாது, நான் சிங்கப்பூரின் பிரஜை என்றெல்லாம் சட்டத்தையும், நீதியையும் ஏமாற்ற சகல வித்தைகளையும் கையாண்டு பார்த்தார்.
ஆனாலும் அவையெல்லாம் முழுமையாக கைகொடுக்காத நிலையில் சென்னை மத்திய சிறை, கடலூர் மத்திய சிறை என்றெல்லாம் அன்னிய செலாவணி மோசடி வழக்குகளுக்காக சிறைக்கு போய் வந்ததோடு இன்றும் இருபத்தெட்டு கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு அவ்வழக்கு மேல்முறையீட்டில் இருக்கும் நிலையில், தினகரன் பிணையில் இருக்கும் குற்றவாளி என்பது தான் உண்மை.
பத்தாண்டு காலம் பதுங்கு குழி வாழ்க்கை, ஆனாலும் எப்போது அம்மா காலியாவார், திண்ணை கைகூடும் என்று காத்து கிடந்த தினகரன், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சிறைக்கு புறப்பட்ட சசிகலாவால் துணை பொதுச்செயலாளர் என்று அறிவிக்கப்பட்டார். உடனடியாக ஔரங்கசீப்பாக தன்னை நினைத்துக்கொண்டு அரபு நாட்டு அரசியலை முன்னெடுத்து அதிமுகவின் மொத்தமும் தன் கட்டுப்பாட்டுக்குள்ளும் வந்துவிட வேண்டும் என்று அவசர கதியில் அதிகார வெறியில் அலைந்தார். முடக்கப்பட்ட இரட்டை இலையை மீட்பதாக சொல்லி இந்திய தேர்தல் ஆணையத்திற்கே லஞ்சம் கொடுக்க முனைந்து கையும், களவுமாக மாட்டி டெல்லி திகார் சிறையிக்கும் போய் வந்தார்.
கோடான கோடிகளை வாரி இரைத்து ஊடகங்கள் மூலம் தினகரன் உருவாக்கிய மாயை ஊர் சனங்களால் சுக்கு நூறாக்கப்பட்டது. திமுகவோடு திரைமறைவு பேரம் நடத்திக்கொண்டு அதிமுகவை பலவீனப்படுத்தவும், அதன் மூலம் மு.க.ஸ்டாலினை எதிர்காலத்தில் முதல்வராக்கவும் தினகரன் மேற்கொண்ட பப்பிஸ் ஓட்டல் ஒப்பந்தங்கள் பலவும் அமமுகவின் இரண்டாம் நிலை தலைவர்கள் தொடங்கி அடிமட்ட தொண்டர்கள் வரை தெரியலாயின. எம்ஜிஆர், ஜெயலலிதா வழி நடத்திய அதிமுகவை ஒருநாளும் மாஃபியாக்களால் வழி நடத்த முடியாது என்று தெளிவான முடிவை எடுத்து திரைமாறிப்போன பறவைகள் அனைத்தும் அதிமுக என்கிற தாய்க்கூடு திரும்ப தொடங்கிவிட்டனர்.
ஆனாலும் இத்தனை விபரங்களும் இப்போதுதான் பிரிந்தவராக அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராக இருக்கும் தங்க தமிழ்செல்வன், தினகரன் ஒரு தீவிரவாத தலைவர் போல செயல்படுகிறார் என்று காலம் கடந்து பெற்ற ஞானம் போல பேசுவது வியப்பாகவும், வேடிக்கையாகவும்தான் இருக்கிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.