உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்களை மீட்கும் முயற்சியில் மத்திய அரசு தீவிரமாக செயல்பட்டு வருவதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
இன்று சென்னை சவுகார்பேட்டையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய மத்திய அமைச்சர் எல்.முருகன், ''கிட்டத்தட்ட 90 சதவிகித மாணவர்கள் இங்கு வந்துவிட்டார்கள். மீதி மாணவர்களையும், மாணவர்கள் மட்டுமில்லாது கடைசி பிரஜை இருக்கும் வரை அவர்களை மீட்பதுதான் நமது அரசின் மிக முக்கிய எண்ணமாக இருக்கிறது. அதுதான் முதல் கடமையாகவும் இருக்கிறது'' என்றார்.
அப்பொழுது குறுக்கிட்ட பத்திரிகையாளர் ஒருவர், 'நேற்று 800 மாணவர்கள்தான் மீட்கப்பட்டதாகவும், மத்திய அரசு மாணவர்களை மீட்பதில் சுணக்கம் காட்டுவதாகவும் கூறுகிறார்களே' என கேட்க, கோபமடைந்த எல்.முருகன், ''தம்பி இங்க பாருங்க, நேற்றைக்கு மட்டும் 3,000 மாணவர்கள் வந்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் நாட்டிற்கு வந்தாச்சு. ஆனால் வெறும் 800 பேர் என்று சொல்றீங்க. தவறான தகவலை கேள்வியாகவே வைக்கக்கூடாது. இது ஒரு சிக்கலான நேரம். ஒரு போர் நடக்கின்ற இடத்தில் மத்திய அரசு அனைத்து முயற்சிகளையும் எடுத்து, இங்கிருந்து நான்கு அமைச்சர்கள் அங்கு போயிருக்கிறார்கள். கடும் பனியிலும் களத்தில் நிற்கிறார்கள். மாணவர்களை மீட்டு இந்தியா வருவதோடு மாணவர்கள் சொந்த மாநிலம், சொந்த கிராமத்திற்குச் செல்லும் வரை மத்திய அரசும், பிரதமர் மோடியும் பார்த்துக்கொள்கிறார்கள்'' என காட்டமாகப் பேசினார்.