அரியலூரில் இயங்கி வருகிறது அரசு சிமெண்ட் ஆலை. இதற்குத் தேவையாக சுண்ணாம்புக்கல் சுரங்கம் தோண்டுவதற்காக அப்பகுதியில் உள்ள ஆனந்தவாடி என்ற கிராமத்தில் 1983ஆம் ஆண்டில் 270 ஏக்கர் விவசாயிகள் நிலத்தை அரசு கையகப்படுத்தியது. அப்போது ஒரு ஏக்கருக்கு 2,500 ரூபாய் என்று மிகவும் விலை குறைவாக வாங்கப்பட்டது.
அப்போது அரசு அதிகாரிகளால் நிலம் கொடுக்கும் விவசாயிகளின் வாரிசுகளுக்களில் ஒருவருக்கு வேலை வழங்கப்படும் என்று உறுதிமொழி வழங்கப்பட்டது. 37 ஆண்டுகள் கடந்த பிறகும் அரசு அதிகாரிகள் உறுதி அளித்தபடி விவசாயிகளின் வாரிசுகளுக்கு வேலை வழங்கப்படவில்லை.
இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு அரசு சிமெண்ட் ஆலை கூடுதல் சிமெண்ட் உற்பத்தியைப் பெருக்குவதற்காக ஆலையை விரிவாக்கம் செய்தது. இதையடுத்து அதற்குத் தேவையான சுண்ணாம்பு கல் எடுக்க ஆனந்தவாடி கிராமத்திற்குச் சென்றனர். ஆலை தரப்பில் கிராம மக்கள் ஏற்கனவே தங்களுக்கு வழங்கிய வாக்குறுதியை ஆலை நிர்வாகம் நிறைவேற்றவில்லை, அப்படியிருக்கும்போது இப்போது சுண்ணாம்புக்கல் தோண்டக் கூடாது என்று கூறி தடுத்து நிறுத்தினார்கள்.
ஆலை அதிகாரிகள் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதில் உடன்பாடு எட்டப்படாததால் மீண்டும் விவசாயிகள் தரப்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டது. அதையடுத்து தமிழக தொழில்துறை அமைச்சர் சம்பத் தலைமையில் அரசு அதிகாரிகளும் ஆனந்தவாடி விவசாயிகளும் அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அப்போது படிப்படியாக விவசாயிகளின் வாரிசுதாரர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் வேலை வழங்கப்படும் என்று உறுதியளித்தனர். ஆனால் உறுதியளித்தபடி வேலை அளிக்காமல் சுமார் 30 வெளியாட்களை வெளியூர்களிலிருந்து வேலைக்கு எடுத்துள்ளது அரசு சிமெண்ட் ஆலை நிர்வாகம். இதன் பிறகு ஆனந்தவாடி கிராமத்தில் சுண்ணாம்பு கல்சுரங்கம் தோண்டுவதற்காக ஆலை அதிகாரிகள் சென்றனர்.
அமைச்சர் தலைமையில் நடந்த பேச்சு வார்த்தையின்போது அரசு அதிகாரிகள் நடந்துகொள்ளவில்லை. எனவே எங்கள் பகுதியில் சுரங்கம் தோண்டக் கூடாது. வேலை வழங்க வேண்டும் அல்லது நாங்கள் அளித்த நிலத்தை எங்களிடமே திருப்பி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து சுரங்கம் தோண்ட வந்த வர்களைத் தடுத்து நிறுத்தி முற்றுகையிட்டனர் ஆனந்தவாடி விவசாயிகள். இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது.
இதையடுத்து அரியலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சீனிவாசன் தலைமையில் போலீசார் ஆனந்தவாடியில் குவிக்கப்பட்டனர். அப்போது உடையார்பாளையம் கோட்டாட்சியர் பூங்கோதை, செந்துறை தாசில்தார் முத்துகிருஷ்ணன் மற்றும் ஆலை நிர்வாகத்தினர் போராட்டம் நடத்திய விவசாயிகளை பஸ் மூலம் சிமெண்ட் ஆலை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று அங்கு வைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதன் முடிவில் நிலம் அளித்த விவசாயிகளின் வாரிசுகளில் 57 நபர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் வேலை அளிப்பது, அடுத்து தகுதி அடிப்படையில் பணி நிரந்தரம் செய்யப்படும் என்று ஆலை நிர்வாகம், அரசு அதிகாரிகள், விவசாயிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து விவசாயிகள் கலைந்து சென்றனர். ஏற்கனவே அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தையில் கூறப்பட்ட உறுதிமொழியைக் காற்றில் பறக்க விட்டதுபோல், இப்போதைய பேச்சுவார்த்தையினையும் காற்றில் பறக்க விடாமல் விவசாயிகளின் வாரிசுகளுக்கு வேலை வழங்க முன்வர வேண்டும் அரசு சிமெண்ட் ஆலை நிர்வாகம் என்கிறார்கள் அப்பகுதி விவசாயிகள்.