பல்வேறு முட்டல் மோதல்களுக்கு பிறகு கடந்த 11 ஆம் தேதி வானகரத்தில் இரண்டாவது முறையாக அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்று அதில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனைத்தொடர்ந்து ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை எடப்பாடி நீக்க, மறுபுறம் எடப்பாடி மற்றும் அவரது ஆதரவாளர்களை ஓபிஎஸ் நீக்கி வருகிறார். அதேபோல் அதிமுக தலைமை அலுவலகம் சீல் வைக்கப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பான வழக்கும் உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்நிலையில் அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இரு தலைவர்களுடனும் நட்பு தொடர்வதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, ''அதிமுக தலைமை விவகாரத்தில் பாஜக விருப்பு, வெறுப்பு காட்டாது. பாஜகவிற்கும் அதிமுகவிற்கும் ஒரு உறவு இருக்கிறது. அந்த உறவு தொடர்ந்து கொண்டிருக்கிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஒரு அங்கமாக இருக்கிறார்கள். அதில் அந்த கட்சியினுடைய நிர்வாகிகள், தொண்டர்கள் எல்லாம் சேர்ந்து எப்படி எல்லாம் இருக்க வேண்டும், அடுத்த தலைவர் யார், அடுத்த கட்ட நகர்வுகள் எப்படி இருக்க வேண்டும் என்று முடிவெடுத்து விட்டார்கள். அது அந்த கட்சியின் முடிவு. அது என்னவாக இருந்தாலும் பாஜக ஏற்றுக்கொள்ளும். அதேநேரத்தில் தனிப்பட்ட முறையில் நம்முடைய நட்பு என்பது அதிமுகவில் இருக்கக்கூடிய அனைத்து தலைவர்களுடன் தொடர்கிறது. இபிஎஸ் உடன் நட்பு தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஓபிஎஸ் அவர்களுக்கு நேற்று கரோனா என தெரிந்தவுடன் இன்று காலை தொலைபேசியில் அவருடைய மகனிடம் பேசினேன். இப்படி அனைத்து தரப்பு தலைவர்களிடமும் நட்பு தொடர்ந்து வருகிறது'' என்றார்.