குழந்தையைக் கிள்ளிவிட்டுத் தொட்டிலையும் ஆட்டுவதாக பாஜக மீது அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.
இபிஎஸ் உருவப்படத்தை எரித்த விவகாரம் தொடர்பாக, உருவப்படத்தை எரித்த தினேஷ் ரோடியை இடைநீக்கம் செய்து நேற்றிரவு மாவட்ட தலைவர் வெங்கடேஷன் உத்தரவு பிறப்பித்திருந்தார். நேற்றிரவு நீக்கப்பட்ட தினேஷ் ரோடியை காலையில் மீண்டும் பாஜகவில் சேர்த்து மேலும், வடக்கு மாவட்ட இளைஞரணி தலைவர் பொறுப்பில் தினேஷ் ரோடி தொடர்ந்து செயல்படுவார் என்றும் மாநில பொதுச்செயலாளர் பாலகணபதி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இன்று சென்னையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பாஜக பொதுச்செயலாளர் தினேஷ் ரோடியின் இடைநீக்கத்தை ரத்து செய்தது குறித்து பேசிய அவர், “எங்கள் கட்சியினர் ஏற்கனவே தெளிவாக சொல்லியுள்ளோம். ஒரு கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளரது உருவப்படத்தை எரிப்பது கண்டனத்திற்குரிய விஷயம். தலைவர் என்பவர்கள் தொண்டர்களின் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த வேண்டும். நாங்கள் கட்டுப்படுத்தினோமே. நாங்களும் கிளர்ந்து எழுந்தால் விபரீதமாக வேறு மாதிரி முடியும். நாங்கள் எச்சரித்தோம். அதன் பிறகு இடைநீக்கம் செய்தார்கள். இப்பொழுது இடைநீக்கத்தை ஏன் ரத்து செய்தீர்கள். கொழுந்துவிட்டு எரியும் தீயில் எண்ணெய் ஊற்றாதீர்கள்.
எங்கள் கட்சி மீதோ எங்கள் தலைவர் மீதோ விமர்சனம் வைத்தால் நாங்கள் பதிலுக்கு விமர்சிப்போம். அதில் யாரும் விட்டுக்கொடுக்க மாட்டோம். ஆனால் கட்சி எடுத்த முடிவு அதிமுக பாஜக கூட்டணி தொடரும் என்பது. ஆனால் கீழ் உள்ளவர்களை கட்டுப்படுத்த வேண்டியது யார் பொறுப்பு. குழந்தையைக் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டக்கூடாது. எங்களுக்கும் அந்த வித்தைகள் தெரியும். நாங்கள் கண்டிப்பாக எதிர்வினை ஆற்றுவோம். உருவப்படத்தை எரித்தவரின் நீக்கத்தை ரத்து செய்தால் ஊக்கப்படுத்துவது போல் தானே உள்ளது. அந்த செயல் கண்டிக்கத்தக்கது” எனக் கூறினார்.