கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் இன்று (19.01.2024) முதல் ஜனவரி 31ஆம் தேதி வரை சென்னை, கோயம்புத்தூர், மதுரை திருச்சி ஆகிய மாவட்டங்களில் நடைபெற உள்ளது. இதனையொட்டி சென்னை நேரு வெளிப்புற விளையாட்டு அரங்கில் பிரதமர் மோடி ‘கேலோ இந்தியா விளையாட்டு’ போட்டியை இன்று மாலை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என். ரவி, மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாகூர், மத்திய இணையமைச்சர் எல். முருகன், தமிழக அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப் பேரவை உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் விழாவில் பங்கேற்றனர்.
இதனையடுத்து பிரதமர் மோடி ஓய்வெடுப்பதற்காக சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்றார். அப்போது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பிரதமர் மோடியை வரவேற்றனர். மேலும் தமிழக பாஜக நிர்வாகிகள் உடன் பிரதமர் மோடி 10 நிமிடங்கள் ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பின் போது நாடாளுமன்ற தேர்தல் குறித்தும், தேர்தலுக்கு தமிழக பாஜக தயாராகி வருவது குறித்தும், கூட்டணி குறித்தும் விவாதிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அதனைத் தொடர்ந்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “என் மண் என் மக்கள் பாத யாத்திரையின் இறுதி நிகழ்வுக்கு பிரதமரை அழைத்து வர நேரம் கேட்டுள்ளோம். இது குறித்து அடுத்த நான்கு, ஐந்து நாட்களில் இறுதி செய்ய வேண்டும். பிப்ரவரி மாதம் 2 வது வாரத்தில் பாத யாத்திரையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். எனவே பிப்ரவரி 2 வது வாரம் நிறைவடையும் பாதயாத்திரை நிகழ்வில் கலந்துகொள்ள பிரதமர் பங்கேற்பதற்காக மீண்டும் தமிழகம் வர வாய்ப்புள்ளது” எனத் தெரிவித்தார்.