
விசிகவின் வெல்லும் சனநாயகம் மாநாடு திருச்சி சிறுகனூரில் நேற்று (26-01-24) நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகையில், ''வெல்லும் சனநாயகம் என்று சொன்னால் போதாது, நாம் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும். சர்வாதிகார பாஜக அரசு தூக்கி எறிவோம்.சமூக நீதி, சமத்துவம் கொண்ட ஆட்சியை இந்தியா முழுவதும் அமைப்பதற்கான வெல்லும் சனநாயகம் மாநாட்டை திருமாவளவன் நடத்தி வருகிறார். அம்பேத்கர் பிறந்த நாளை சமத்துவ நாளாக அறிவித்தோம். தமிழ்நாட்டில் பாஜக என்பது பூஜ்ஜியம். அதைப்பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. இந்தியாவின் ஜனநாயகத்தை, மக்களாட்சி, பன்முகத்தன்மை ஆகியவற்றை காப்பாற்ற பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது. பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியா என்ற கூட்டாட்சி இருக்காது. மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகம், மாநிலங்கள் என்ற நிலையே இருக்காது'' என்றார்.
இந்த நிலையில், பா.ஜ.க தேசிய மகளிர் அணித் தலைவரும், எம்.எல்.ஏவுமான வானதி சீனிவாசன் இன்று (27-01-24) செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “கேலோ இந்தியா ஒரு தேசிய அளவிலான நிகழ்வு. இதற்கு மத்திய அரசு பெருமளவு நிதியுதவி செய்திருக்கிறது. இந்த விளையாட்டுப் போட்டிகள் சென்னையில் மட்டுமல்லாமல் கோவை, திருச்சி, மதுரை போன்ற இடங்களிலும் நடைபெறுகிறது. கோவையில் இந்த போட்டிகள் நடந்து கொண்டிருப்பதற்காக பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருக்கும் பேனர்களில் பிரதமர் மோடியின் புகைப்படம் இல்லை. ஆனால், மத்திய அரசு சார்பில் வைக்கப்பட்டுள்ள பேனர்களில் முதல்வர் புகைப்படத்தை மத்திய அரசு வைத்துள்ளது” என்று கூறினார்.
அப்போது, தமிழ்நாட்டில் பாஜக என்பது பூஜ்ஜியம் என்று முதல்வர் கூறியது குறித்து வானதி சீனிவாசனிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “தமிழகத்தில் பா.ஜ.க பூஜ்ஜியம் என்றால் சட்டசபையில் எதற்காக எங்கள் கேள்விக்கு திமுகவினர் பதில் சொல்கிறார்கள்?. ஒவ்வொரு நாளும் பா.ஜ.கவை வைத்துதான் திமுக அரசியல் என்பது இயங்கிக் கொண்டிருக்கிறது. பா.ஜ.க இல்லையென்றால் இன்றைக்கு அரசியல் இல்லை என்பது போலத் தான் அவர்கள் நடந்து கொள்கிறார்கள்” என்று தெரிவித்தார்.